02,Jul 2020 (Thu)
  
சோதிடம்

ஆண்டு பலன் - 2020

1-1-2020 முதல் 31-12-2020 வரை

அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்

நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தாண்டு வந்துவிட்டது. எண்ணங்கள் ஈடேற வேண்டுமானால் குருவின் அருட்பார்வை வேண்டும். அந்த அமைப்பு ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு இருக்கிறது.

உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் ராகுவும், 9-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். வெற்றிகள் ஸ்தானாதிபதி புதன், சூரியனோடு இணைந்து புத - ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். வருடத் தொடக்கத்திலேயே 9-ம் இடத்தில் 5 கிரகங்கள் சேர்க்கை பெற்றிருக்கின்றன. சூரியன், புதன், வியாழன், சனி, கேது ஆகியவற்றின் சேர்க்கையால் நல்ல மாற்றங்களும், ஏற்றங்களும் வரப்போகிறது. பாக்கியாதிபதி சூரியன், ஜீவன ஸ்தானாதிபதி புதன், தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி ஆகியவற்றுடன், ஞானகாரகன் கேதுவும் இணைந்து குருவிற்கு சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிப்பதால், பூர்வ புண்ணியத்தின் பலனால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நற்பலன்களும் இப்பொழுது கிடைக்கப் போகிறது.

ஆண்டின் தொடக்கத்தில் குரு பலம்

வருடம் தொடங்கும் பொழுதே குரு உங்கள் ராசியையும், 3 மற்றும் 5 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். ‘ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன்தரும்’ என்பது விதி. அந்த அடிப்படையில் இனித் தொழிலில் அதிக அளவில் லாபம் கிடைக்கும். ஒரு சிலர் கிளைத் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உருவாகும். பலவித உபாதைகளால் அவதிப்பட்டவர்கள், அதில் இருந்து நிவாரணம் பெறுவா். மறைமுக எதிர்ப்புகள் மறையும். வியாபார முன்னேற்றம் கருதிப் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன் வருவீர்கள். குரு பார்வையால், மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான வாய்ப்பு உருவாகும். மழலைப் பேறுக்காக காத்திருப்பவர்களுக்கு, அதற்கான சூழல் உருவாகும்.

வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். தன, சப்தமாதிபதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சுகாதிபதி சந்திரன் லாப ஸ்தானத்தில் உலாவுகிறார். இவற்றைப் பார்க்கும் பொழுது செவ்வாய் நீங்கலாக மற்ற அனைத்து கிரகங்களும் ராகு-கேது ஆதிக்கத்தில் இருக்கின்றன. எனவே கேதுவால் கெடுபலன்கள் நடைபெறாமல் இருக்கவும், ராகுவால் யோக வாய்ப்பு கள் வந்து சேரவும், அனுகூலம் தரும் ஸ்தலங்களுக்குச் சென்று சர்ப்ப சாந்தி பரிகாரங்களைச் செய்யுங்கள்.

மகர குருவின் சஞ்சாரம்

8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசிக்குள் குரு வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு இணைந்து சஞ்சரிக்கும் சனியும் வக்ரம் பெற்றிருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருவும், 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனியும் வக்ரம் பெறும் இந்த காலகட்டத்தில், தொழிலில் கூடுதல் கவனம் தேவை. சேமிப்புகள் கொஞ்சம் கரையும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்பு கள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காது. எதிரிகளின் பலம் கூடும். ஏமாற்றம் அதிகரிக்கும்.

15.11.2020-ல் மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். அது குருவிற்கு நீச்ச வீடாகும். இருப்பினும் சுய ஜாதகத்தில் குரு நீச்சம் பெற்றிருப்பவர்களுக்கும், குரு மறைவு ஸ்தானத்தில் இருப்பவர்களும் இது ஒரு பொற்காலமாகும். மகர குருவின் சஞ்சார காலத்தில், குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகிறது. இதன் விளைவாக தாய்வழி ஆதரவும், வாகன யோகமும் உண்டு. பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் சில சிக்கல்கள் தீரும். வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு, நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்குச் செவிசாய்ப்பர். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கலாம்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாம் இடத்தில் ராகுவும், 9-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். பின்னோக்கிச் செல்லும் இந்தக் கிரகங்கள் தான், உங்கள் வாழ்க்கைப் பாதையில் முன்னோக்கிச் செல்ல வழிவகுத்துக் கொடுப்பவை. இந்த கிரகங்கள் 1.9.2020-ல் இடம்பெயர்கின்றன. அச்சமயம் 2-ம் இடத்தில் ராகுவும், 8-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு வரும் ராகுவால், திரண்ட செல்வம் கிடைக்கும். பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைய வழிபிறக்கும். குடும்ப பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். விரயங்களை சுபவிரயமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தங்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. மனக்குழப்பங்கள் அகல அருளாளர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். அதைத் தொழிலுக்கு மூலதனமாக மாற்றுவீர்கள். போட்டிகள் இருந்தாலும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரத்தில் உடல்நலனில் கவனம் தேவை. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது, அலைச்சலைக் குறைத்துக்கொள்வது, உடல்நலனைக் காக்க உதவும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் சுய ஜாதகத்தில் ராகு- கேதுக்களின் பாதசார பலமறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால், வளர்ச்சிப் பாதையில் ஏற்படும் தளர்ச்சியை அகற்றலாம்.

சனிப்பெயர்ச்சிக் காலம்

உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனிபகவான், 29.4.2020 முதல் 14.9.2020 வரை வக்ரம் அடைகிறார். இந்த வக்ர காலத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். உங்களின் தொழில் வளர்ச்சியும், லாபமும் அவர் கையில்தான் இருக்கிறது. சனி பகவான் வக்ர காலத்தில் இருக்கும் பொழுது, தொழில் போட்டி அதிகரிக்கும். நீங்கள் தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்கவர் என்றாலும், உங்களால் துணிந்து எந்த முடிவையும் எடுக்க இயலாது.

13.2.2020 முதல் 22.3.2020 வரை தனுசு ராசிக்குள் செவ்வாய் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. 3.5.2020 முதல் 17.6.2020 வரை தனுசு ராசியில் உள்ள சனி பகவான் கும்பத்தில் உள்ள செவ்வாயைப் பார்க்கிறார். உங்கள் ராசிநாதனாக செவ்வாய் விளங்குவதால், அவரோடு சம்பந்தப்பட்ட சனியின் ஆதிக்க காலமான இந்த காலகட்டத்தில், பிறருக்கு பொறுப்பு ஏற்பதை தவிர்ப்பது நல்லது. கடன்சுமை அதிகரிக்கலாம். ஒருகடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பதவி உயர்வும், வெளிநாட்டுப் பயணமும் தாமதப்பட்டுக் கொண்டே வரும். பெற்றோர்களின் ஆதரவு குறையும். இக்காலத்தில் அங்காரகனையும், சனி பகவானையும் தொடர்ந்து வழிபட்டு வாருங்கள்.

26.12.2020 உத்திராடம் 2-ம் பாதத்தில் மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகி செல்கிறார். 10-ம் இடத்திற்கு வரும் சனி பகவான், முத்தான பலன்களை உங்களுக்கு வாரி வழங்குவார். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியப் புள்ளிகளின் வரிசையில் நீங்களும் இடம்பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். தொழில்புரிவோருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சுயதொழில் செய்ய முன்வருவர். வீடுகட்டும் வாய்ப்பு அல்லது வாங்கும் வாய்ப்பும் கைகூடும். வரும் காலத்தை வசந்த காலமாக மாற்றிக்கொள்ள கிரகநிலைகள் சாதகமாக உலாவரும் நேரம் இது.

செல்வ வளம் தரும் வழிபாடு

சதுர்த்தி விரதமிருந்து விநாயகப்பெருமானை வழிபட்டு வருவதோடு யோகபலம் பெற்ற நாளில் படைவீட்டில் ஒன்றான பழனியில் ராஜ அலங்கார முருகனையும், போக மா முனிவரையும் வழிபட்டு வந்தால் பலன்கள் பலமடங்கு கிடைக்கும். வளர்ச்சியும், வசதி வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

குருவின் வக்ர காலமும், பரிவர்த்தனை யோகமும்

27.3.2020-ல் குரு வக்ர இயக்கத்தில் மகர ராசிக்குச் செல்கிறார். அங்கு 7.7.2020 வரை வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். வலிமையிழந்த குரு நன்மை செய்ய, வியாழன்தோறும் தென்முகக் கடவுளை வழிபடுங்கள்.

அதே நேரத்தில் மகரத்தில் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கும் குருவும், தனுசு ராசியில் வக்ரமாக இருக்கும் சனியும் தங்களின் வீடுகளை மாற்றிக்கொண்டுள்ளன. இதை ‘பரிவர்த்தனை யோகம்’ என்பர். யோகங்களில் முதல்தரமான யோகம் இது. இந்த காலகட்டத்தில் தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். பங்காளிப் பகை மாறும். வெளிநாட்டு யோகம் கைகூடும். துன்பங்கள் விலகும்.ஆலயத் திருப்பணிகளை முறையாகச் செய்ய முன்வருவீர்கள். வாகனப் பழுதுகளால் கவலைப் பட்ட நீங்கள், இப்பொழுது புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டில் மங்கல நிகழ்ச்சிகள் பல மனையில் நடைபெறப்போகிறது. தடைகள் விலகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். கணவன் - மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தாய் வழி ஆதரவு உண்டு. ராகு - கேது பெயர்ச்சிக்குப் பிறகு, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒருசிலருக்கு வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். குரு 10-ல் வரும்போது பதவி உயர்வும், உத்தியோகத்தில் முன்னேற்றமும் வந்துசேரும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். ராகு - கேதுக்களின் ஆதிக்கத்தால் நன்மை கிடைக்க, சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வதோடு, செவ்வாய்க்கிழமை விரதமிருந்து, முருகப்பெருமானை வழிபடுங்கள்.

ஆண்டு பலன் - 2020

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment


செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு