தொழில்நுட்பம்

வருகிறது 3ம் தலைமுறை Hyundai i20 கார்!

இந்தியாவின் சிறந்த ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக விளங்கிவரும் Hyundai நிறுவனத்தின் i20 மாடலின் 3ம் தலைமுறை கார் இந்த ஆண்டின் மத்தியில் களமிறக்கப்பட இருக்கும் நிலையில் அக்காரின் படங்கள் மற்றும் விவரங்கள் வெளியாகியிருப்பது ஆட்டோமொபைல் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

வரும் மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெற இருக்கும் ஜெனிவா ஆட்டோமொபைல் கண்காட்சியில் i20 மாடலின் 3ம் தலைமுறை காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தக் கார் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் காரின் படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ஆட்டோமொபைல் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மிகவும் புதிய தோற்றத்தில், வடிவமைப்பில், ஸ்டைலில் வரவிருக்கும் 3ம் தலைமுறை i20 காரின் அறிமுகம் தற்போதே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இந்த படத்தில் உள்ள 3ம் தலைமுறை i20 காரின் முகப்பில் புதிய Hexagonal grille வடிவமைப்புடன் பகல்நேரத்தில் எரியும் வகையிலான எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் ஃபாக் விளக்குகள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் எலாண்ட்ரா மற்றும் வெர்னா கார்களின் முகப்பை பிரதிபலிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. ஸ்போர்டி அமைப்பை மேலும் மெருகேற்றும் விதமாக 16 இஞ்ச் அலாய் வீல்கள். முகப்பை போலவே பின்புறமும் மிகவும் கச்சிதமான மாற்றங்களை சந்தித்துள்ளது. முன்புற மற்றும் பின்புற டிசைன் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது.

தற்போதைக்கு இந்த படங்களின் மூலம் வெளிப்புற அம்சங்கள் மட்டுமே தென்படுகின்றன என்றாலும் உட்புறத்தில் பெரிய அகலமான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் தொழில்நுட்பம், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் போன்றவை இடம்பெறலாம் என தெரிகிறது.

அதே போல வென்யூ மற்றும் கிரெட்டா கார்களில் உள்ள இஞ்சின் ஆப்ஷன்கள் புத்தம் புதிய i20 காரிலும் கொடுக்கப்படலாம் என தெரிகிறது.

வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற i20 மாடலுக்கு புதிய தலைமுறை மாடல் மேலும் வரவேற்பை பெற்றுத்தரும் என நம்பப்படுகிறது. இக்கார் அறிமுகமாகும் பட்சத்தில் Maruto baleno, Tata altroz, honda jazz மற்றும் Volkswagen Polo மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.