சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் முத்துவேலர் தெருவில் வசிக்கும் செல்வம் - சத்தியா தம்பதிக்கு 8 வயதில் சரண், மூன்றரை வயதில் மதன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். செல்வம் வீட்டின் அருகே உணவகம் நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி ஹோட்டலில் உணவு தயாராகிக் கொண்டிருந்தபோது, இரண்டாவது மகன் மதன் உள்ளே சென்று விளையாடி இருக்கிறார். அப்போது கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை தட்டிவிட, மதனின் கை மற்றும் வயிற்று பகுதியில் சாம்பார் கொட்டியது. வலியில் அலறி துடித்த மகனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஒரு மாதத்திற்கு மேலாக சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தீக்காயம் சரியான நிலையில் மதனை வீட்டுக்கு அழைத்து சென்றனர். தீக்காயம் முழுவதும் குணமடைந்த நிலையில், சிறுவனின் கையில் தீக்காயத்தின் தழும்புகள் இருந்தன. அதை சரிசெய்ய சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் கண்ணதாசன் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதன் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்தால் கை முழுவதும் உள்ள சுருக்கங்கள் நீங்கி விடும் எனவும் அதற்கு 35,000 ரூபாய் செலவாகும் என மருத்துவமனை சார்பில் தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து மதனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சிறுவன் மதனுக்கு கையில் வலி அதிகரித்து துடித்துள்ளார். இதனிடையே, சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டான். தங்களது மகனுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, மருத்துவமனை மீது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது அவர்கள் விளக்கம் அளிக்க முன்வரவில்லை. தீக்காயத்தில் இருந்து தப்பித்த சிறுவன், தோலில் ஏற்பட்ட சுருக்கத்தை சரி செய்யும் சிகிச்சையில் இறந்து விட்டானே என பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
0 Comments
No Comments Here ..