முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரச்சந்திர, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விற்பனை செய்து பெறப்பட்ட முற்பணத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை மைத்திரிபால சிறிசேன செலுத்தியிருக்கலாம் என சந்கேம் எழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே குறித்த பணம் எப்படி ஈட்டப்பட்டுள்ளது என்பது தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரி அவர் இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீட்டை செலுத்தமாறு நீதிமன்றம், மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவிட்டது.
இதன்படி ஒன்றரை கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பணத்தை செலுத்த தம்மிடம் வசதி இல்லை எனவும் எனவே அதனை பகுதி பகுதியாக செலுத்த 10 வருடங்கள் காலவகாசம் தருமாறு மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
இவ்வாறு கோரிய நிலையில், கடந்த 13 ஆம் திகதி சுமார் 3 கோடி ரூபாய் (28 மில்லியன்) செலுத்தப்பட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி வௌியாகியுள்ளது.
எஞ்சிய பணத்தை செலுத்த 10 வருடங்கள் காலவகாசம் கோரியிருந்த நிலையில் திடீரென இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அந்த பணம் ஈட்டப்பட்ட விதம் தொடர்பில் ஆராயுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரச்சந்திர, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.
0 Comments
No Comments Here ..