அவுஸ்ரேலியாவையே புகைமூட்டமாக மாற்றிய காட்டுத்தீக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சிலநாட்களிலேயே, பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம்! அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதி தீவிர மழை பதிவாகியுள்ளது.
சிட்னி நகரில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 391.5 மில்லிமீட்டர் மழை பொழிந்துள்ளதை அடுத்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வெள்ளம் ஏற்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதி தீவிர மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிட்னி நகரத்தில் இன்று (திங்கட்கிழமை) மக்கள் பயணத்தை தவிர்க்குமாறும், வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும் அவசரகால உதவி குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, சிட்னி மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை கடும் மழையால் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பரவிய காட்டுத்தீ முடிவுக்கு வந்திருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து எரியும் காட்டுதீயால் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்;. மேலும் 2000 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
10 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு தீக்கு இரையானது. மேலும், சுமார் ஒரு பில்லியன் விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments
No Comments Here ..