13,May 2024 (Mon)
  
CH
விளையாட்டு

அவுஸ்ரேலிய அணிக்கு பதிலடி கொடுத்தது தென்னாபிரிக்கா!

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெறற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் குயின்டன் டி கொக் மற்றும் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

குயின்டன் டி கொக் அதிரடியாக ஆட முதல் பவர்-பிளே ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 59 ஓட்டங்களை குவித்தது.

இந்நிலையில் 7ஆவது ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின்னர் ஆடுகளம் நுழைந்த முன்னாள் அணித்தலைவர் பாப் டு ப்ளெஸிஸ் 15 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.

மறுமுனையில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் குயின்டன் டி கொக் 31 பந்துகளில் இருபதுக்கு இருபது சர்வதேச அரங்கில் தனது 6ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

தொடர்ந்து 15ஆவது ஓவரில் 4 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் மொத்தமாக 70 ஓட்டங்களை குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரைஸ் வென் டர் டைஸன் 2 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் மொத்தமாக 37 ஓட்டங்களை பெற்று 19ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆடுகளத்தில் டேவிட் மில்லர் 11 ஓட்டங்களுடனும், பைட் வென் பில்ஜொன் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில் கேன் ரிச்சர்ட்சன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பெட் கம்மிண்ஸ் மற்றும் அடம் ஸம்பா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.

159 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்ரேலிய அணிக்கு ஓரளவு சிறந்த ஆரம்பம் கிடைத்தது.

ஐந்தாவது ஓவரில் அணித்தலைவர் ஆரேன் பிஞ்ச் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், முதல் பவர்-பிளே ஓவர்கள் நிறைவில் அவுஸ்ரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 54 ஓட்டங்களை குவித்தது.

அதனை தொடர்ந்து இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கிடையில் 50 ஓட்டங்கள் பகிரப்பட்டது.

நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆடுகளம் நுழைந்த விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவுஸ்ரேலிய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

தொடர்ந்து 18ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியது.

இறுதி 2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் மீதமிருக்க அவுஸ்ரேலிய அணியின் வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவைப்பட்டன. மெத்யூ வேட் வந்த வேகத்திலேயே 18ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் இறுதி ஓவரில் அஸ்டன் அகார் 5 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க இறுதியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கியது.

மறுமுனையில் டேவிட் வோர்னர் இருபதுக்கு இருபது சர்வதேச அரங்கில் தனது 16ஆவது அரைச் சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டாலும் அவர் 56 பந்துகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் லுங்கி ங்கிடி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அண்ரிச் நோட்ரியா, ககிஸோ ரபாடா, மற்றும் டுவைன் பிரிடோரியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணித்தலைவர் குயின்டன் டி கொக் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது சர்வதேச தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றுள்ளது.





அவுஸ்ரேலிய அணிக்கு பதிலடி கொடுத்தது தென்னாபிரிக்கா!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு