இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் 3ஆம் கட்டத்துடன் முழுமையாக முடியப்போவதில்லை எனவும் சில தளர்வுகளுடன் 4ஆவது கட்டமாக நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில முதல்வர்களுடன் நேற்று (திங்கட்கிழமை) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த மார்ச் 20ஆம் திகதியும் ஏப்ரல் 2, 11 மற்றும் 27ஆம் திகதிகளில் ஆலோசனை நடத்தினார். அதன்படி 3ஆவது கட்ட முடக்கம் எதிர்வரும் 17ம் திகதி நீடிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். ஏறக்குறைய 6 மணிநேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், “நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பல்வேறு கட்ட முயற்சிகளோடு, தடுப்பு நடவடிக்கைகளோடு, இணையாக பொருளாதார நடவடிக்கைகளையும் தொடங்குவதற்கு மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும்.
கிராமப்புறங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். நம் கண்முன் இரு சவால்கள் இருக்கின்றன. கொரோனா பரவும் பாதிப்பையும் கட்டுப்படுத்த வேண்டும்.
2ஆவதாக பொதுமக்களின் செயற்பாட்டுக்கும் பொருளாதார நடவடிக்கைக்கும் அனுமதிக்க வேண்டும். அதற்கான அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளை நோக்கி நாம் நகர்வோம்.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், சமூக விலகல் மட்டுமே அதைத்தடுக்கும் ஆயுதம்.
கொரோனா பாதிப்புக்கு பின்னர் உலகம் பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குபின் என்று உலகப்போரைப்போல் மாறிவிட்டது.
இந்த மாற்றங்களை நாம் எவ்வாறு செயற்படுத்தப்போகிறோம் என்பதை நாம் கண்டிப்பாகத் திட்டமிட வேண்டும். முடக்கத்தினை எவ்வாறு படிப்படியாக தளர்த்துவது, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவது குறித்து எதிர்வரும் 15ஆம் திகக்குள் முதல்வர்கள் அனைவரும் எனக்கு செயற்திட்டத்தை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 4வது கட்ட முடக்கத்துக்கு இந்தியா தயாராகிவிட்டது என்பது புலப்படுவதாகவும், ஆனால் கடந்த 3 கட்ட முடக்கத்தில் இருந்தது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல், சில தளர்வுகள் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தளர்வுகள் குறித்து எதிர்வரும் நாட்களில் மத்திய அரசு அறிவிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
No Comments Here ..