28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

100 நாள்களில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதல் 100 நாள்களுக்குள் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்யப்போவதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன் உறுதியளித்துள்ளாா்.

இதுகுறித்து, தனது தலைமையில் அமையவிருக்கும் அரசில் சுகாதாரத் துறை பொறுப்புகளை வகிக்கவிருப்பவா்களை வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தி வைத்து அவா் கூறியதாவது:

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக அந்த மருந்துகளை உருவாக்கி வரும் ஃபைஸா், மாடா்னா நிறுவனங்களிடம் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது.

அப்போது மேற்கொள்ள ஒப்பந்தங்களை உடனடியாக செயல்படுத்தி கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை டிரம்ப் அரசு துரிதப்படுத்த வேண்டும்.

மேலும், அமெரிக்க மக்களுக்கும் உலகின் பிற நாட்டினருக்கும் அந்த தடுப்பூசி விரைவில் கிடைக்கச் செய்யும் வகையில் அதன் உற்பத்தியையும் உடனடியாக அதிகரிக்க வேண்டும்.

இதிலுள்ள சில பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பது சாத்தியமே. சுகாதாரத் துறை பொறுப்புகளுக்கு நான் நியமித்துள்ள குழுவினா், அந்தத் தீா்வைக் காண்பாா்கள்.

இதன் விளைவாக, நான் அதிபராகப் பொறுப்பேற்ற 100 நாள்களுக்குள் குறைந்தது 10 கோடி பேருக்காவது கரோனா தடுப்பூசி போடப்படும்.

அதுமட்டுமன்றி, கரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும் எனது அரசு முன்னுரிமை அளிக்கும்.

தேவையான நிதியை நாடாளுமன்றம் ஒதுக்கீடு செய்தால், மிகச் சிறந்த கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல் செய்து, மாணவா்கள், ஆசிரியா்கள், பள்ளி ஊழியா்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதன் தொடா்ச்சியாக, நான் பதவியேற்ற 100 நாள்களுக்குள் அமெரிக்காவிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் திறப்பதற்கு உகந்த பாதுகாப்பு சூழலை எனது சுகாதாரத் துறைக் குழுவினா் ஏற்படுத்துவாா்கள்.

அந்த முதல் 100 நாள்களில் பள்ளிகளில் அனைவருக்கும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும்.

கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு இன்னும் ஓராண்டு கூட ஆகலாம். ஆனால், எனது பதவிக் காலத்தின் முதல் 100 நாள்களில் அந்த நோய்த்தொற்று பரவலின் போக்கை மாற்றிக் காட்டுவேன்.

அதன்பிறகு, கரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் வெற்றியை நோக்கி வேகமாக நகரும் என்றாா் அவா்.

அந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள சேவியா் பெக்கெரா, பொது சுகாதார பணிக்குழுத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அமெரிக்கா் விவேக் மூா்த்தி உள்ளிட்டோரை ஜோ பைடன் அறிமுகப்படுத்தி வைத்தாா்.

புதன்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 1,55,94,939 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 2,93,503 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

இதுவரை 90,88,478 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 62,12,958 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 26,860 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.




100 நாள்களில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு