11,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...

ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் தேவ்தத் படிக்கல் சதம் கடந்து கைகொடுக்க பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ‘சூப்பர்’ வெற்றி பெற்றது. கோஹ்லி அரைசதம் கடந்தார்.


மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு கேப்டன் கோஹ்லி ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.


 ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர், மனன் வோரா ஜோடி துவக்கம் தந்தது. முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த பட்லர் (8) நிலைக்கவில்லை. ஜேமிசன் பந்தில் வோரா (7) வெளியேறினார். கேன் ரிச்சர்ட்சன் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த கேப்டன் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் வீசிய 8வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். அடுத்த பந்தில் சாம்சன் (21) அவுட்டானார். ராஜஸ்தான் அணி 43 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது.


 பின் இணைந்த ஷிவம் துபே, ரியான் பராக் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. சிராஜ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஷிவம் துபே, யுவேந்திர சகால் வீசிய 9வது ஓவரில் 2 சிக்சர் விளாசினார். தொடர்ந்து அசத்திய துபே, ரிச்சர்ட்சன் வீசிய 11வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரியான் பராக், ஹர்ஷல் படேல் வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்த போது பராக் (25) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய துபே (46), ரிச்சர்ட்சன் ‘வேகத்தில்’ வெளியேறினார்.


ஹர்ஷல், சிராஜ் வீசிய முறையே 14, 19வது ஓவரில் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ராகுல் டிவாட்டியா (40) நம்பிக்கை தந்தார். ஹர்ஷல் வீசிய கடைசி ஓவரில் கிறிஸ் மோரிஸ் (10), சேட்டன் சக்காரியா (0) அவுட்டாகினர். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்தது. ஸ்ரேயாஸ் கோபால் (7) அவுட்டாகாமல் இருந்தனார். பெங்களூரு சார்பில் சிராஜ், ஹர்ஷல் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்.

 எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ராகுல் டிவாட்டியா பந்தில் தொடர்ச்சியாக 2 சிக்சர் அடித்த படிக்கல், முஸ்தபிஜுர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கேப்டன் கோஹ்லி, அரைசதம் கடந்தார்.

பெங்களூரு அணி 16.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (72 ரன், 3 சிக்சர், 6 பவுண்டரி), படிக்கல் (101 ரன், 6 சிக்சர், 11 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.




பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு