முன்னொருபோதும் எதிர்கொண்டிராத கொவிட் நோய்க்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் இந்திய சகோதரர்களின் நலனுக்காக தொடர்ந்து பிரார்த்தனைகளை முன்னெடுத்து வரும் இலங்கை மக்கள் மற்றும் மத குருமார்கள் உள்ளிட்டோருக்கு இந்திய மக்கள் சார்பாகவும் அரசாங்கம் சார்பாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
2. இந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிடைக்கப்பெறும் எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள், செய்திகள் தொடர்பாகவும் அதேநேரம் பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்படும் விசேட நிகழ்வுகள் குறித்தும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் அதிகாரிகளும் உயர் ஸ்தானிகரும் பெருமகிழ்வடைகின்றனர்.
3. இந்திய மக்களுக்காக பிரார்த்தனைகளும் பல்வேறு விசேட நிகழ்வுகளும் இலங்கையில் பல பிரதேசங்களிலும் நடத்தப்பட்டுள்ளன. பல்வேறு விகாரைகளில் ரத்ன சூத்ரா பாராயண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2021 ஏப்ரல் 29ஆம் திகதி வஸ்கடுவா ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகா விகாரையில் சங்கைக்குரிய கலாநிதி வஸ்கடுவா மகிந்தவன்ச மகாநாயக்க தேரர் அவர்களின் ஆசியுடன் விசேட பூஜைகள் பிரார்த்தனைகள் நடைபெற்றன. 2021 மே முதலாம் திகதி எம்பிலிப்பிட்டியவில் உள்ள ஸ்ரீ போதிராஜ மடாலயத்தில் பாரத ஆசீர்வாத பூஜை ஒன்று சங்கைக்குரிய கலாநிதி ஓமல்பே சோபித நாயக தேரர் அவர்களால் புத்த தாதுக்கள் சன்னிதானத்தில் நடத்தப்பட்டிருந்தது. அதேபோல மாளிகாகந்தையில் உள்ள ஆக்ரா ஸ்ராவக விகாரை உள்ளிட்ட பல இடங்களில் அன்றைய தினம் மகாபோதி சபையின் ஏற்பாட்டின் கீழ் சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெற்றிருந்தது. 2021 மே இரண்டாம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா ஜஹம்பத் அவர்களின் ஏற்பாட்டில் திருகோணமலை திரியாய ரஜ மகா விகாரையில் மற்றொரு சிறப்பு வழிபாடு இடம்பெற்றிருந்தது. 2021 மே 3ஆம் திகதி கங்காராமை விகாரையில் பாரத ஆசீர்வாத பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமல்லாமல் 2021 மே 5ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீ நாக விகாரையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றிருந்தன. இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் புத்த சாசன, மத விவகாரங்கள், கலாசார விவகார அமைச்சு ஆகியவை இணைந்து 2021 மே 06 ஆம் திகதி முதல் ஒரு வார சிறப்பு பாராயண நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
4. இதேபோல 2021 ஏப்ரல் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் கந்தர்மடம் நடராஜர் ஆலயத்தில் இந்து மத சபையினால் விசேட பூஜைகள் நடத்தப்பட்டிருந்தது. இந்த சிறப்பு வழிபாட்டின் ஓர் அங்கமாக வேத பாராயணங்கள் மற்றும் திருமுறை ஓதுதல் போன்ற நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. 2021 மே 2 ஆம் திகதி கொழும்பில் உள்ள சீரடி சாய் நிலையத்தில் மற்றொரு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக 2021 மே 7ஆம் திகதி கொழும்பில் உள்ள மயூராபதி ஆலயத்தில் இந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக தன்வந்திரி பெருமானை வேண்டி மற்றொரு விசேட பூஜை நிகழ்வொன்று நடைபெற உள்ளது. இதற்கு மேலதிகமாக 2021 மே 8ஆம் திகதி இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்களில் மஹா மிருத்யுஞ்ச யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
5. 2021 மே 2 ஆம் திகதி அங்கிலிக்கன் திருச்சபை ஞாயிறு திருப்பலியில் இந்தியாவின் நலனுக்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றிருந்தன. வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் இந்தியாவில் கல்வியை பெற்றுக் கொண்டிருந்த இலங்கை பிரஜைகள் ஒன்றிணைந்து 2021 ஏப்ரல் 27ஆம் திகதி இந்தியாவுக்கான கூட்டொருமைப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தனர். அதுமட்டுமல்லாமல் ‘thinkingofindia’, ‘PrayForIndia’ ஆகிய குறிச்சொற்கள் இலங்கையில் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு வர்த்தக கட்டமைப்புகள் மற்றும் சங்கங்கள் போன்றவற்றினாலும் கூட்டொருமைப்பாட்டுக்கான சமிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
6. 2021 ஏப்ரல் 28ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இலங்கை ஜனாதிபதி கௌரவ கோதாபய ராஜபக்ஷ அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் வெளிப்படுத்தி இருந்தமை நினைவில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். 2021 ஏப்ரல் 29ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது கூட்டொருமைப்பாட்டையும் உணர்வுவெளிப்பாட்டினையும் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.
7. இரு நாட்டு மக்கள் மத்தியிலும் மிகவும் ஆழமாக வேரூன்றி இருக்கும் உறவுகள் அத்துடன் இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பல்லாயிரம் ஆண்டுகால பிணைப்பு ஆகியவற்றின் உண்மையான பிரதிபலிப்பாக இடம் பெற்ற இந்த பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் போன்றவற்றால் இந்திய உயர் ஸ்தானிகராலயம் பணிவன்புடன் மனநெகிழ்வடைகின்றது.
0 Comments
No Comments Here ..