உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்று, கோஹினூர் வைரம். இந்த கோஹினூர் வைரம், இந்தியாவில் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. இதன் எடை 105.6 கேரட். இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் வைத்திருந்தார் என்றும், அது 1857-ம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்கு பின்னர் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்த வைரத்தைத் திரும்பத்தர முடியாது என்று இங்கிலாந்து கூறிவிட்டது. இந்த வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தைத்தான் மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்தார். ஆனால், இந்த வைரத்தை இந்தியா சொந்தம் கொண்டாடுவது உள்பட பல்வேறு சர்ச்சைகள் உள்ளதால், இது பதிக்கப்பட்ட கிரீடத்தை அணிவதை இங்கிலாந்து ராணி கமீலா பார்க்கர் தவிர்த்து விட்டார்.
அவர் அதற்கு பதிலாக ராணி மேரி அணிந்திருந்த கிரீடத்தைத்தான் அணிந்தார். இருப்பினும் இந்த வைரம், இங்கிலாந்து அரசின் சொத்தாகத்தான் இருக்கிறது. லண்டன் நகரில் உள்ள லண்டன் டவரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற நவம்பர் மாதம் வரை நடைபெறுகிற புதிய ஆபரணக் கண்காட்சியில் இந்த வைரம் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்தியா சொந்தம் கொண்டாடுகிற வைரத்துக்கு, இது வெளிப்படையான அங்கீகாரமாக அமைகிறது.
கோஹினூர் வைரம் மட்டுமின்றி, மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆபரணங்களும் இந்தக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இதுபற்றி லண்டன் டவரின் உறைவிட கவர்னர் ஆண்ட்ரூ ஜாக்சன் கூறும்போது, "மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து இந்த புதிய ஜூவல் ஹவுஸ் கண்காட்சியைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆபரணக் கண்காட்சி, வரலாற்றை முன் எப்போதையும் விட விரிவாக ஆராய்கிறது" என தெரிவித்தார்
0 Comments
No Comments Here ..