ஐசிசி இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கியிருந்த இலங்கை இளையோர் அணி நியூசிலாந்து இளையோர் அணியிடம் அதிர்ச்சித் தோல்வியை அடைந்து காலிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.
இலங்கை இளையோர் அணி, தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணத்துக்காக அசான் திலகரட்னவின் பயிற்றுவிப்பின் கீழ் கடந்த இரண்டு வருடங்களான சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது.
இப்போது, அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை இளையோர் அணி Plate கிண்ணத்திற்காக போட்டிகளில் விளைாயடவுள்ளதுடன், கடந்த 2018ம் ஆண்டைப் போன்று ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளது.
தெரிவுகள் சரியானதா?
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணித் தெரிவு மற்றும் துடுப்பாட்ட வரிசையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன.
குறிப்பாக, இலங்கை அணியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் ஓட்ட எண்ணிக்கையை சிறப்பாக நகர்த்தக்கூடியவர் என பயிற்றுவிப்பாளரால் பேசப்பட்டவர் அஹான் விக்ரமசிங்க. ஆனாலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியை பொருத்தவரை, 8வது துடுப்பாட்ட வீரராகவே அவர் களமிறக்கப்பட்டார்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 141 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், களமிறங்கிய இவர், 48 பந்துகளுக்கு 64 ஓட்டங்களை விளாசியதுடன், இலங்கை அணி 242 ஓட்டங்களை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இப்படி, சிறப்பாக துடுப்பெடுத்தாடக்கூடியவர் இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறக்கப்படவில்லை என்ற விமர்சனம் ஏற்கனவே எழுந்திருந்த நிலையில், இந்தப் போட்டியில் ஏன் 8வது துடுப்பாட்ட வீரராக அஹான் விக்ரமசிங்க களமிறக்கப்பட்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதேபோன்று, இலங்கை அணியால் 243 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை இருந்த போதும், நியூசிலாந்து அணியின் முன்வரிசை வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தமையினால் அந்த அணி த்ரில் வெற்றியையும் பெற்றுக்கொண்டது.
ஆனால், இலங்கை இளையோர் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான அம்ஷி டி சில்வா குறித்த போட்டியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். தென்னாபிரிக்கா ஆடுகளங்கள் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக இருந்தும், ஒரு வேகப் பந்துவீச்சாளருடன் மாத்திரமே இலங்கை அணி விளையாடியமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. அத்துடன், கடந்த 12-24 மாதங்களில் இலங்கை இளையோர் அணி ஒரு வேகப் பந்துவீச்சாளருடன் களமிறங்கிய முதல் சந்தர்ப்பமாகவும் இந்தப் போட்டி அமைந்திருந்தது.
நியூசிலாந்து இளையோர் அணிக்கு எதிரான போட்டியில் அதிக சுழல் பந்துவீச்சாளர்களுடன் இலங்கை அணி களமிறங்குவது திட்டமாக இருந்தாலும், புதிய மற்றும் ஆட்டத்தின் இறுதி நேரங்களில் சிறப்பாக பந்துவீசக் கூடிய அம்ஷி டி சில்வா நீக்கப்பட்டமை மற்றுமொரு தவறாக பார்க்கப்படுகிறது.
அஷான் திலகரட்னவின் பயிற்றுவிப்பின் கீழ் கடந்த 2 வருடங்களாக சிறப்பான பயிற்சிகளை மேற்கொண்டு வந்த இலங்கை இளையோர் அணிக்கு இறுதியாக பெற்ற இரண்டு தோல்விகள் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. எனினும், இந்த தோல்விகளானது இந்த இளம் வீரர்களுக்கு முடிவு கிடையாது. அணியில் நிபுன் தனன்ஜய உள்ளிட்ட 4 அல்லது 5 திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இவர்கள், எதிர்வரும் காலங்களில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்டுத்துவார்கள் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்
இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணி கடந்த 13 இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களில் தோல்வியை தழுவி வருகின்றது. இதற்கான காரணம் இலங்கை பாடசாலை கிரிக்கெட் கட்டமைப்பாகவும் இருக்கலாம்.
இலங்கை பாடசாலை கிரிக்கெட் கட்டமைப்பானது கடந்த 2 தசாப்தத்தில் மிகச்சிறந்த கட்டமைப்பாக இருந்தாலும், தற்போது அது கணிசமாக பலமின்றியதாக மாறி வருகின்றது. எனவே, இலங்கை கிரிக்கெட் மற்றும் இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் என்பன இணைந்து கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நேரமாக இது மாறியுள்ளது.
இலங்கை பாடசாலை U19 கிரிக்கெட் டிவிஷன் 1 போட்டிகளில் 36 பாடசாலைகள் மோதுகின்றன. இது இலங்கை கிரிக்கெட்டுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. மொத்தமாக 200 இற்கும் அதிகமான பாடசாலைகள் உள்ளதுடன், அனைத்து பாடசாலைகளும் 6-7 தரநிலைகளுக்கு கீழ் பிரிக்கப்பட்டு, போட்டித் தொடர்களில் பங்கேற்க வேண்டும்.
அதேநேரம், பாடசாலை U19 கிரிக்கெட் டிவிஷன் 1 அணிகள் 16 ஆக குறைக்கப்பட்டு, ரவுண்ட்-ரொபின் சுற்று அடிப்படையில் செப்டம்பர் தொடக்கம் ஜனவரி வரை போட்டிகள் நடாத்தப்பட வேண்டும். அத்துடன், பாடசாலைகளின் மரபு ரீதியான போட்டிகள், இந்த காலப்பகுதிகளை தவிர்த்து, பருவகாலத்துக்கு முன்னர், அல்லது பருவகாலம் முடிவடைந்து நடத்தப்பட வேண்டும். அதுமாத்திரமின்றி இறுதிச் சுற்றுப் போட்டிகள் இரண்டு நாட்கள் கொண்ட போட்டிகளாக இல்லாமல் மூன்று நாட்கள் கொண்ட போட்டிகளாக நடத்தப்பட வேண்டும்.
பாடசாலைகளுக்கான 19 வயதுக்குட்பட்டோர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளும், இரண்டு நாட்கள் போட்டித் தொடருடன் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். இப்படி நடத்தும் பட்சத்தில் பாடசாலை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளை வளர்க்க முடியும்.
பாடசாலை 19 வயதுக்குட்பட்டோர் தொடரை தவிர்த்து, பாடசாலைகளுக்கான மாபெரும் கிரிக்கெட் சமர், 5 மாகாண அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் என்பவற்றை நடத்துவது அவசியம். அதேநேரம், புதிய வீரர்களை அடையாளம் காணும் பொருட்டு ஏனைய மாகாணங்களை உள்ளடக்கிய டியர் 2 தொடர்களை நடத்த வேண்டும். முக்கியமாக மாகாணங்களுக்கு இடையிலான தொடரில் அனைத்து வகையான போட்டிகளும் நடத்தப்பட வேண்டும்.
இதேபோன்ற கட்டமைப்பு U17 மற்றும் U15 வயதுப்பிரிவுகளுக்கும் நடத்தப்பட வேண்டும். எனினும், அதிகமான அணிகள் பங்கேற்பதால் இந்த செயன்முறை கடினமான ஒன்றாக அமையாலாம். ஆனாலும், புதிய திறமைகளை இனங்காணுவதற்கு மாவட்டமட்ட போட்டிகளில் இருந்து வீரர்களை அவதானிக்க வேண்டும். அப்படி, அடையாளம் காணப்படும் வீரர்களை 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் குழாம் என்ற அடிப்படையில் 4 வருடங்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கி ஒரு குழாமாக மாற்ற வேண்டும்.
2022ம் U19 உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தல்
இலங்கை கிரிக்கெட் 2022ம் ஆண்டுக்கான U19 உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தல்களை இப்போது இருந்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக இம்முறை U19 உலகக் கிண்ணத் தொடர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற போதும், அங்கு எந்தவொரு இரு தரப்பு தொடர்களையும் இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்யவில்லை. இதுவொரு மிக முக்கிய தவறாகும்.
டில்ஷான் மதுசங்க மாத்திரம் இலங்கை வளர்ந்து வரும் அணியுடன் தென்னாபிரிக்கா சென்று விளையாடியிருந்தார். இந்த குழாத்தில் நிபுன் தனன்ஜய, கமில் மிஷார, சொனால் தினூஷ மற்றும் அஷைன் டேனியல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.
அடுத்த இளையோர் உலகக் கிண்ணம் நடைபெறுவதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் சபை மேற்கிந்திய தீவுகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் இரண்டு வருடங்களில் இரண்டு இருதரப்பு தொடர்களையேனும் இளையோர் அணிக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இம்முறை நடைபெற்ற U19 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியை தோல்வியடையச் செய்த நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள், கடந்த டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருதரப்பு மற்றும் முத்தரப்பு தொடர்களில் விளையாடியிருந்தன.
இதேவேளை, இலங்கை U19 அணியை தவிர்ந்த ஏனைய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் இம்முறை காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அதேநேரம், இம்முறை முதல் 8 அணிகளுக்குள் இடம்பிடிக்க முடியாத இலங்கை அணி 2022ம் ஆண்டுக்கான குழுநிலையில், 2 முதல் நிலை அணிகள் இடம்பெறும் குழாத்துக்குள் இடம்பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..