டெல்லியில் நடைபெற்றுவரும் கலவரத்தை மத்திய அரசு ஒடுக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நடிகர் ரஜினிகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தமது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்றிரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
டெல்லியில் நடைபெற்றுவரும் கலவரத்தை வன்மையாக கண்டிக்கிறேன். உளவுத் துறையின் தோல்வியே அங்கு நடைபெற்றுவரும் வன்முறை சம்பவங்களுக்கு காரணம். உளவுத் துறையின் தோல்வி என்றால், அது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தோல்விதான்.
டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையென்றால் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் மறைமுகமாக சாடினார்.
மேலும் அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே, இந்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது பயனளிக்காது. போராட்டங்கள் வன்முறைகள் இல்லாமல் அமைதி வழியில் இருக்க வேண்டும்.
மதத்தின் பெயரால் அரசியல் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என்னை பாஜகவின் ஊதுகுழல் எனச் சொல்வது வருத்தமளிக்கிறது. எது உண்மையோ அதைதான் பேசுகிறேன் என்று ரஜினிகாந்த் கூறினார்.
சில மாதங்களுக்கு முன், "பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் மகாபாரத்தில் வரும் அர்ஜுனன், கிருஷ்ணரை போல செயல்படுகிறார்கள் " என்று ரஜினி பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..