27,Apr 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கொக்குதொடுவாய் பகுதி அகழ்வாராய்சியில் ஐக்கியநாடு தலையிட வேண்டும் – கடிதம் அனுப்பிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிக்கு விஜயம் மேற்கொண்டு, சர்வதேச நியதிகளுக்கு அமைவாக அகழ்வு மற்றும் ஆதாரப்பாதுகாப்பு என்பன இடம்பெறுவதைக் கண்காணித்து உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விசாரணை ஆணையாளர் ஆகியோரிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் தண்ணீர் குழாய்களைப் பொருத்துவதற்காகக் கடந்த மாதம் 29 ஆம் திகதி நிலத்தைத் தோண்டியபோது மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் என்பன தென்பட்டதையடுத்து, அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன. அதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிவானின் உத்தரவுக்கு அமைவாகக் கடந்த 6 ஆம் திகதியன்று அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு, சர்வதேச நியதிகளுக்கு அமைவாக அகழ்வு மற்றும் ஆதாரப்பாதுகாப்பு என்பன இடம்பெறுவதைக் கண்காணித்து உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விசாரணை ஆணையாளர் அல்பான் அலென்கஸ்றோ ஆகியோருக்குத் தனித்தனியாகக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது.


அக்கடிதங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

அண்மையில் முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ்மக்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் சார்பில் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 8 ஆவது பந்தி இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியங்களை சேகரிப்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும், அவற்றைப் பாதுகாத்துவைப்பதற்குமான அதிகாரத்தை மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியிருக்கின்றது. இவ்வதிகாரத்தைக் கருத்திற்கொண்டே நாம் இக்கோரிக்கையை முன்வைக்கின்றோம்.



இலங்கையில் கண்டறியப்பட்டிருக்கின்ற 33 ஆவது மனிதப்புதைகுழியான கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி, போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தது. அதுமாத்திரமன்றி இப்புதைகுழியை அண்மித்த பகுதியில் இராணுவமுகாம் ஒன்றும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இம்மனிதப்புதைகுழிகளில் கண்டறியப்பட்டுள்ள மனித எச்சங்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுடையது என்ற அச்சம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் காணப்படுகின்றது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், உங்களது அலுவலகத்தின் தலையீடின்றி உண்மை வெளியே வராது என்ற சந்தேகமும் நிலவுகின்றது. அதேபோன்று மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் உடனடியானதொரு சர்வதேசப்பொறிமுறையும் அவசியமாகின்றது என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 




கொக்குதொடுவாய் பகுதி அகழ்வாராய்சியில் ஐக்கியநாடு தலையிட வேண்டும் – கடிதம் அனுப்பிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு