02,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

ஐம்பதாயிரம் தடுப்பூசிகள் மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா? வினோ எம். பி. கேள்வி

வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கோவிட் தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது எதற்காக என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


ஐம்பதாயிரம் கோவிட் தடுப்பூசிகளும் அரசாங்கத்தின் அறிவிப்பு ஆரம்பத்தில் வட மாகாண மக்களுக்கென தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு செலுத்தி முடிக்கப்பட்டது. யாழ். மாவட்ட மக்களிடம் கோவிட் தொற்றின் பரவல் காணப்படுவது போலவே வன்னியிலும் தீவிர பரவல் காணப்படுகின்றது.


வட மாகாணம் என்பது யாழ். மாவட்டம் என்பதாக வடமாகாண சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும், அரச உயர் அதிகாரிகளும், அரச தரப்பின் யாழ். அரசியல் தலைமைகளும் எண்ணங்கொண்டிருப்பது தவறான முன்னுதாரணமாகும்.


ஐம்பதாயிரம் சினோபாம் தடுப்பூசிகளில் குறிப்பிட்ட அளவினையாவது வன்னி மாவட்ட மக்களுக்கும் செலுத்தி கோவிட் பரவலை கட்டுப்படுத்த தவறுவது, அல்லது அக்கறை கொண்டிருக்காமை அரசாங்கமும், யாழ். மையவாத அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள் வன்னி மக்களுக்கு செய்கின்ற துரோகமாகும்.


கோவிட் 19 முழுமையாக இன்று அரசியல் மயப்பட்டிருக்கும் இக்காலத்தில் வன்னியை பிரதி நிதித்துவப்படுத்தும் இரு அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் அக்கறையற்று இருப்பது அல்லது திராணியற்று இருப்பது கவலைக்குரியது.


அரசில் அங்கம் வகிக்கும் இவர்கள் அடுத்த கட்ட தடுப்பூசிகளை வன்னி மக்களுக்கு செலுத்துவதற்கான அழுத்தங்களை கொடுத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.


வட மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளும் வழங்கப்படுகின்ற கோவிட் தடுப்பூசிகளை வன்னி மாவட்டத்துக்கும் வழங்க முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டும். வவுனியாவிலும், மன்னாரிலும் மரணங்களும், தொற்றும் அதிகரித்துச் செல்கின்றதுகின்றது.


அதே போல் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைக் கொத்தணி பல நூற்றுக்கணக்கான தொற்றாளர்களை இனங்கண்டது. பல கிராமங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளமைக்கு ஆடைத்தொழிற்சாலைக் கொத்தணியே காரணமாகும்.


நாம் ஆரம்பத்தில் ஆடைத் தொழிற்சாலையில் ஒரு சில தொற்றுக்கள் காணப்பட்ட வேளையில் தொழிற்சாலையை இழுத்து மூடுமாறு பல தரப்பினரிடமும் கோரியிருந்தோம். அவர்கள் மறுத்துவிட்டனர்.


இன்று அது 350க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டு தொடர் கொத்தணியாக பரவி விட்டிருக்கின்றது. இதன் பின்னரும் தடுப்பூசியின் அவசியத்தை அதிகாரிகள் அலட்சியப்படுத்துவார்களாயின் அது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.


வன்னி மாவட்டம் தடுப்பூசி வழங்கலில் புறக்கணிக்கப்படுவது அல்லது ஏமாற்றப்படுவது ஏன் என்பதை அதிகாரிகளும், அரசாங்கமும் பகிரங்கமாக வன்னி மக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 




ஐம்பதாயிரம் தடுப்பூசிகள் மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா? வினோ எம். பி. கேள்வி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு