02,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

பிரான்ஸ் உள்பட 12 நாடுகளுக்கு செல்லும் வாழை நார் கூடைகள்

மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வாங்கி கொடுப்பதை விட அவர்கள் சுயதொழில் செய்து முன்னேறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என திட்டமிட்டோம்.

கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை நிர்கதியாக்கி விட்டது. வாழ்வாதாரம் இழந்த பலர் கடன் சுமைக்கு ஆளாகி வாழ்வை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். அதுபோன்ற முடிவு எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தி வரும் அரசு, மனநல ஆலோசனைகள் வழங்கி அவர்களின் வாழ்வை மீட்டெடுக்கும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே நிதி நிறுவனம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்ற பலர் தவணைத் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் அவமானங்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சியுடன் கூடிய தொழிலை கற்றுக்கொடுத்து, நிரந்தர வருவாயை ஈட்டித்தரும் பணியில் மாநில அரசு செயல்படுகிறது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடனில் தத்தளிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வாழை நாரில் இருந்து கூடை தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொடுத்து நிரந்தர வருவாயை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இது குறித்து மாநில அளவிலான ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பயிற்சியாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனங்களில் 1,560 மகளிர் சுய உதவி குழுக்கள் சுமார் 35,000 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களுக்கு குழுவை வழி நடத்துவது, வழிகாட்டுவது, கடன் உதவி போன்ற உதவிகள் செய்து வந்தோம். ஆனால் அவர்கள் கடன் வாங்கும்போது இருக்கும் ஆர்வம் திருப்பி செலுத்தும்போது இருப்பதில்லை. காரணம் வாங்கிய கடனை ஏதாவது ஒரு வகையில் செலவு செய்து விடுகின்றனர்.

இந்த நிலையில் மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வாங்கி கொடுப்பதை விட அவர்கள் சுயதொழில் செய்து முன்னேறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். அதன்படி வாழை நார் மூலம் கூடை தயாரித்து அதை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஆர்டர் கிடைத்தது. அதற்கு முதலில் பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தோம்.

இதைத்தொடர்ந்து மகளிருக்கு தினமும் ரூ.200 முதல் 350 வரை ஊதியம் கிடைக்கும் வகையில் அவர்கள் சொந்த ஊரிலேயே வேலையை செய்து வருமானம் பெறுவதுடன் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பணி பாதுகாப்பும் சுகாதார பாதுகாப்புக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழில் செய்யும்போது சுயதொழில் என்றால் என்ன? அதில் என்ன வருமானம் கிடைக்கும் என்பதை அவர்களது உறவினர்களும் அறிந்து கொள்ள முடிந்தது. இதனால் சுயஉதவிக்குழு பெண்களின் கணவர்களும் இந்த தொழிலை கற்றுக்கொண்டு வேலை செய்து குடும்ப வருமானத்தை ஈட்டுகின்றனர். அத்துடன் இந்த குழுவினர் கடனில் சிக்கித் தவிக்காமல் சொந்தக்காலில் நிற்கக்கூடிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

வடகாடு, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் தயாரிக்கும் கூடைகள் கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது 27 செ.மீ. அகலமும், 19 செ.மீ. உயரமும் கொண்ட கூடையை தயாரித்து வருகின்றனர். இந்த கூடைகள் முடைவதற்கான நார்ப் பொருள்கள் திருநெல்வேலி மற்றும் சோழவந்தான் ஆகிய பகுதிகளில் வாங்கப்படுகிறது.

பெண்களுக்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கிறோம். அதைத் தொடர்ந்து அவர்கள் 200 ரூபாய் சம்பாதிக்கும் தகுதியை பெற்று விடுகின்றனர். டிரீஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் கூடை பின்னும் பெண்களுக்கு வாரம் ஒரு முறை ஊதியம் வழங்கப்படுகிறது. பெண்கள் சுயதொழில் மூலம் வருமானம் பெற்று சொந்தக்காலில் நிற்கும் தன்னம்பிக்கையை நாங்கள் வளர்த்து வருகிறோம் என்றார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




பிரான்ஸ் உள்பட 12 நாடுகளுக்கு செல்லும் வாழை நார் கூடைகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு