இணையத்தளம் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி மோசடிகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகோல தெரிவித்துள்ளார்.
"இணையத்தளம் மூலம் ஒன்லைன் வேலைகளை வழங்குவதாகக் கூறி மோசடிகள் அதிகரித்துள்ளன, அதே போல் கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில் கிரிப்டோ-கரன்சி மோசடிகள் மற்றும் பிரமிட் மோசடிகள் அதிகரித்துள்ளன. 2023 இல் 1,609 இணைய மோசடிகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் , ஜனவரி மாதத்தில் மாத்திரம் இதுபோன்ற 110 மோசடிகள் பதிவாகியுள்ளன. பெப்ரவரியில் 213 இணைய மோசடிகள் பதிவாகியுள்ளன, மார்ச் மாதத்தில் இதுவரை 100 மோசடிகள் பதிவாகியுள்ளன. சில பண மோசடி முறைப்பாடுகள் கிடைத்தவுடன் அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை அளித்து, கணினி குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
இணையத்தில் நிகழும் கணினி குற்றங்கள் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், இணையத்தளம் ஊடாக நிர்வாண புகைப்படங்கள் வெளியிடப்படும் என விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன. 2023ல் இதுபோன்ற 775 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்தோடு 1609 இணையதள மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடர்பில் 5,188 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குழந்தைகள் சம்பந்தப்பட்ட 98 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், தனிநபர்கள் கணக்குகளுக்குள் ஊடுருவியமை தொடர்பில் 7,499 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. ஊடுருவியமை மற்றும் போலி கணக்குகளின் முறைப்பாடுகளே அதிகரித்துள்ளன." என்றார்.
0 Comments
No Comments Here ..