யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஒரு முக்கியமான அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில், புதைகுழியில் நீலநிறப் புத்தகப்பை மற்றும் சிறுவர்கள் விளையாடும் பொம்மையுடன் கண்டெடுக்கப்பட்ட S-25 என அடையாளமிடப்பட்ட எலும்புக்கூடு, 4 முதல் 5 வயதுடைய ஒரு சிறுமியினுடையதாக இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சிறுவர்களுடையது எனச் சந்தேகிக்கப்படும் S-48 மற்றும் S-56 என அடையாளமிடப்பட்ட மற்ற இரண்டு எலும்புக்கூடுகளுக்கும், புத்தகப்பையுடன் கண்டறியப்பட்ட சிறுமியின் எலும்புக்கூட்டிற்கும் இடையே உடைகள் மற்றும் எலும்பியல் சார்ந்த ஒத்த தன்மைகள் இருப்பதாகவும் மருத்துவ அதிகாரி பிரணவன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சிறுவர்களுக்குச் சொந்தமானவை எனச் சந்தேகிக்கப்படும் இந்த இரண்டு எலும்புக்கூடுகளிலும் எலும்பியல் ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
0 Comments
No Comments Here ..