உலகம் முழுவதையும் நடுங்க வைக்கும் கொரோனா வைரஸ் மனித இனத்திற்கு பெரும் தீங்கிழைத்து வருகிறது. இந்த நோய் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களால் அடக்கம் செய்ய முடியாது. சுகாதாரத்துறையினரே விஞ்ஞான ரீதியில் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்து வருகிறார்கள்.
தங்களையும் கொரோனா பாதித்துவிடுமோ என்ற அச்சத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவிடாமல் கூட சில பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்திய சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதுபோல் தற்போது வேறு நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களையும் அடக்கம் செய்ய உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் செல்லாத நிலையை கொரோனா உருவாக்கிவிட்டது.
இத்தகைய சூழ்நிலையில் துமகூரு டவுனில் கே.எச்.பி. காலனி பகுதியில் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு மத்தியில் அதே பகுதியை சேர்ந்தவர் எச்.எஸ்.நாராயண ராவ் (வயது 60). இவர் வயோதிகத்தால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். தையல் கடைக்காரரான இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாராயண ராவ் திடீரென்று உயிரிழந்தார். ஆனால் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த அவரது உடலை அடக்கம் செய்ய முடியாமல் அவரது குடும்பத்தினர் பரிதவித்து வந்தனர். இதுபற்றி அறிந்த அந்தப் பகுதி முஸ்லிம் இளைஞர்கள் முகமது காலித், இம்ரான், திப்பு, ஷெரு, ஷாரூக், தவுபீக் சாத், காதீப் மற்றும் மன்சூர் ஆகியோர் பண உதவி செய்ய முன்வந்தனர்.
அவர்கள் நாராயணராவ் குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்ததுடன், இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
அத்துடன் முதியவரின் உடலை அவர்களே ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கு நடத்தி, அந்தப் பகுதியில் ஒரு மின்மயானத்தில் உடலை தகனம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மதத்தை கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய இளைஞர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
0 Comments
No Comments Here ..