நாட்டில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, கேகாலை மாவட்டத்தின் 2 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கேகாலை மாவட்டத்தின் அல்கொட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஹிகுலோய, மஹவத்த ,ஹலமட ஆகிய பகுதிகளும் டென்ஸ்வோர்த் தோட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் கிரிபத்கொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாஹென கிராம சேவகர் பிரிவு இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 323 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக நாடளாவிய ரீதியில் 43,855 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..