ஈராக் தலைநகர் பக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில், மூன்று ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்கள் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை என்ற போதிலும், தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மூன்று கத்யுஷா ஏவுகணைகள் விழுந்ததை ஈராக் பொலிஸார் உறுதிப் படுத்தியுள்ளனர்.
அத்தோடு, பாக்தாத்திற்கு வெளியே உள்ள ஜஃபரானியா மாவட்டத்தில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக நம்பப்படுகின்றது.
இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற துணை இராணுவ படை குழுக்கள் நடத்தியிருப்பதாக, அமெரிக்கா குற்றச்சாட்டியுள்ளது. எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூளும் சூழ்நிலை எழுந்துள்ள நிலையில், இந்த தாக்குதல் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..