கொரோனா தொற்று முழுமையாகக் குறையாத நிலையில் உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்துவதில் கூடுதல் கவனம் தேவை என்று
உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக நாடுகளில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 180க்கும் அதிகமான நாடுகள் பொருளாதார ரீதியாகவும், நோய்த் தொற்று சார்ந்தும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
இதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த நிலையில் சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் இதற்கான முன்னெடுப்பை எடுக்க அமெரிக்காவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. பாதிப்புக்கள் அவ்வளவாக இல்லாத இலங்கையும் ஊரடங்கை தளர்த்த ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்கைத் தளர்த்துவது ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, ”உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தும்போது கூடுதல் கவனம் தேவை. ஊரடங்கைத் தளர்த்தினால் வைரஸ் மீண்டும் பரவலாம். உலக நாடுகள் இதனைக் கவனமாக அணுக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸால் 38,20,703 பேர் பாதிக்கபட்டுள்ளனர். 2,65,094 பேர் பலியாகியுள்ளனர். 13,03,122 பேர் குணமடைந்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..