05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

உலக உணவுத்திட்டத்தால் 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது

 பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருப்போருக்கு உதவும் நோக்கில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அவசர உதவி செயற்திட்டத்தின் ஊடாக இதுவரையில் 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்பான உலக உணவுத்திட்டத்தினால் கடந்த ஜுலை மாதம் நாட்டின் உணவுப்பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இத்தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


 அவ்வறிக்கையின் பிரகாரம் உலக உணவுத்திட்டத்தினால் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட அவசர உதவி செயற்திட்டத்தின் ஊடாக இதுவரையில் சுமார் 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் உதவிகளைப் பெற்றிருக்கின்றார்கள். அதேபோன்று சுமார் 3.9 மில்லியன் மக்கள் ஓரளவு உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

 அதேபோன்று பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கில் உலக உணவுத்திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய பாடசாலைகளுக்கான உணவு வழங்கல் திட்டத்தின்கீழ் நாடளாவிய ரீதியில் 9 மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு அவசியமான அரிசி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.


 மேலும் நாட்டின் விவசாயத்துறையைப் பொறுத்தமட்டில் 2023 இல் விவசாய மற்றும் பயிர்ச்செய்கை உற்பத்தி வெளியீடுகளின் அளவு சாதக மட்டத்தைப் பதிவுசெய்யவில்லை என்றும், பயிர்ச்செய்கைக்கு அவசியமான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளமை அவதானிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 அத்தோடு உணவுப்பொருட்களின் உயர்வான விலைகள் மக்கள் அவற்றைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளைத் தோற்றுவித்திருப்பதாகவும், இது பெருமளவான மக்களின் உணவுப்பாதுகாப்பு நிலை கேள்விக்குட்படுத்தப்படுவதற்குக் காரணமாக அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக நாட்டிலுள்ள குடும்பங்கள் மத்தியில் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் 3.9 மில்லியன் மக்கள் ஓரளவு உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும், 100 000 மக்கள் தீவிர உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.



அதேபோன்று 56 சதவீதமான குடும்பங்கள் தமது உணவுத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்குப் பல்வேறுபட்ட மாற்றுவழிகளைக் கையாளும் அதேவேளை, கடந்த 2022 மேமாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது மிகக்குறைந்த மட்டத்திலான முன்னேற்றமே அடையப்பட்டிருக்கின்றது என்று உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. 





உலக உணவுத்திட்டத்தால் 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு