பதுளை மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 10 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து வந்த ஒருவர் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளைப் பிரதேசத்தில் ஒருவரைக் கம்பால் தாக்கி கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பதுளை பொலிஸார் இந்த நபருக்கு எதிராக பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். விசாரணையின் போது, பிரதிவாதி அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றதால், அவர் இல்லாத நிலையிலேயே வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அன்றைய மேல் நீதிமன்ற நீதிபதி 2015 ஏப்ரல் 27 அன்று தீர்ப்பை அறிவித்து, சந்தேகநபருக்கு மரண தண்டனை விதித்தார்.
நீதிமன்ற உத்தரவை புறக்கணிப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், பொலிஸாரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றம் திறந்த பிடியாணை உத்தரவைப் பிறப்பித்தது. சுமார் 10 வருடங்களாக நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து தலைமறைவாக இருந்த இந்த நபர், அண்மையில் மொனராகலை புத்தம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மனைவியைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், பதுளை மேல் நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், இந்த நபர் நீதிமன்றத்தை புறக்கணித்து, பதுளையிலிருந்து தப்பிச் சென்று, புத்தம பகுதியில் குடியேறி, அங்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.
விளக்கமறியலில் வைப்பு
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையுடன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பதுளை பொலிஸார் சந்தேக நபரை பதுளை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, மேல் நீதிமன்ற நீதிபதி மஹிந்த லியனகம, அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..