இலங்கையில் சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act - PTA) நீக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நாட்டில் இல்லாது செய்வதே தங்கள் கட்சியின் அரசியல் ரீதியான கொள்கையாக ஆரம்ப காலம் தொட்டு இருந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தேசிய மக்கள் சக்தி (National People's Power - NPP), பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் ஆகிய இரண்டின் போதும் இதற்கான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்ததையும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நினைவுபடுத்தினார்.
இதற்கமைய, ஜனாதிபதியும் இந்த விடயத்தில் அதிக அக்கறை செலுத்துவதுடன், நீதி அமைச்சரும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக ஏற்கனவே ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய சட்டங்களை வகுப்பதற்கும், அதேசமயம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..