எதிர்வரும் பொது தேர்தலின் கடமைகளுக்காக சுமார் 2 லட்சம் அதிகாரிகளை பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதில் தேர்தல் நடவடிக்கைகளின் பாதுகாப்பிற்காக பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை தேர்தலுக்காக சுமார் 12 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள்; ஆயத்தப்படுத்தப்படவுள்ளன.
அதேநேரம் குறைந்த பட்சம் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 24 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் காவல்துறை அதிரப்படையையும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் தேவை ஏற்பட்டால் இராணுவத்தினரின் உதவியையும் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது தேர்தலுக்காக இதுவரை 24 சுயாதீன குழுக்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
கடந்த 4 ஆம் திகதி முதல் கட்டுப்பணம் செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் அது நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறை பொது தேர்தலுக்காக சுமார் 7 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..