இத்தாலியில் வேகமாக பரவிவரும் கொவிட் 19 தொற்றால் 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இத்தாலியின் லொம்பர்டி பிராந்தியத்திலும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 11 மாகாணங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏப்பிரல் மாதம் வரை குறித்த மக்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இத்தாலியில் கொவிட் 19 தொற்றால் புதிதாக 36 பேர் பலியாகியுள்ள நிலையில் அங்கு இதுவரை 5 ஆயிரத்து 823 பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, சீனாவில் குவான்ஜோ நகரில் கொவிட் 19 தொற்றுக்கான தனிமைப்படுத்திய சிகிச்சை மையமாக பயன்படுத்தப்பட்டு வந்த விருந்தகம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
இதில் சுமார் 70 பேர் சிக்குண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த இடிபாடுகளில் இருந்து 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதா என இதுவரை அறியப்பிடவில்லை என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இடிபாடுகளில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த விருந்தகம் சரிந்து வீழ்ந்தமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
இதேவேளை, கொவிட் 19 தொற்றால் சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து 652 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 ஆயிரத்து 70 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன் தென்கொரியாவில் இந்த தொற்றால் இதுவலை 48 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 ஆயிரத்து 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொவிட் 19 தொற்றால் சர்வதேச ரீதியில் இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 ஆயிரத்து 570 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..