20,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

சசிகலாவுக்கு கொரோனா – உறுதிப்படுத்திய வைத்தியசாலை

சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.

ஜனவரி 27 ஆம் திகதி தனது தண்டனை முடிந்து அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அவர் பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், இதுதொடர்பாக நேற்று (ஜனவரி 21) 6 மணிக்கு மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், அவருக்கு தொடர்ந்து ஆண்டி வைரல் மற்றும் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான் தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அவருக்கு செய்யப்பட்ட ஆர்.டி.பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் ஆகிய இரண்டு பரிசோதனைகளும் கொரோனா இருப்பதாக காட்டவில்லை.

“அவருக்கு ஏற்பட்ட சுவாசத் தொற்று காரணமாக அவருக்கு இருமலும் காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 – 3 நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடியும்” என்று அவர் சேர்க்கப்பட்டுள்ள பௌரிங் அன்ட் லேடி கர்சன் மருத்துவமனையின் இயக்குநர் டொக்டர் மனோஜ் குமார் தெரிவித்திருந்தார்.

சசிகலாவுக்கு மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டதால், அவர் பெங்களூரு மத்திய சிறையில் இருந்து புதன்கிழமை மாலை பௌரிங் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவரது ஆக்சிஜன் ஏற்பு விகிதம் 70 க்கு சென்றுவிட்டது. “அதையடுத்து அவருக்கு ஆக்சிஜன் தரப்பட்டது. இப்போது நன்றாக இருக்கிறார். நடக்கிறார்” என்று டொக்டர் மனோஜ் குமார் தெரிவித்தார்.

“சிறைக் கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான விக்டோரியா மருத்துவமனையில் அவருக்கு சி.டி. ஸ்கேன் செய்கிறோம். இது வழக்கமாக செய்வதுதான். கோவிட் பரிசோதனை முடிவு வரவில்லை என்பதால் அவரை நேற்று அங்கு அனுப்ப முடியவில்லை. சி.டி.ஸ்கேன் முடிந்து அவர் மீண்டும் இங்கே கொண்டுவரப்படுவார்” என்று மனோஜ்குமார் தெரிவித்தார்.

சசிகலா தண்டனை பெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் குற்றவாளி. ஆனால், அவரது மரணத்துக்குப் பிறகே உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததால், அவருக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.

இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சசிகலா தமக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திவிட்டார். இதன் அடிப்படையில் அவர் 27 ஆம் திகதி அவர் விடுதலை செய்யப்படவுள்ளார்.




சசிகலாவுக்கு கொரோனா – உறுதிப்படுத்திய வைத்தியசாலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு