13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

இலங்கைக்கான தூதுவர் அலைனா ரெப்லிஸ்ற்றுக்கும் , இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகளிற்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா ரெப்லிஸ்ற்றுக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகளிற்குமிடையில் இன்று (24) காலை சந்திப்பு நடந்தது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்திப்பு நடந்தது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

 இலங்கை விவகாரம் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்த முதலாவது அறிக்கைக்கும், தற்போது இணை அனுசரணை நாடுகள் சமர்ப்பித்துள்ள அறிக்கைக்குமிடையில் உள்ள வேறுபாடு குறித்து தமிழ் அரசு கட்சி பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனர்.

 அமெரிக்கா இந்த விடயத்தில் தலையிட்டு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் காத்திரமான நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர். இலங்கையில் போர்க்குற்றமிழைத்தமை தொடர்பில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்க பயணத்தடை விதித்துள்ளது. இதேபோல ஏனைய போர்க்குற்றவாளிகள் மீதும் பயணத்தடை விதிக்க வேண்டும், தனது நட்பு நாடுகளையும் அந்த நடவடிக்கைக்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

 மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசு, சிறுபான்மையினருக்கு எதிரான அரசியலமைப்பை நிறைவேற்ற வாய்ப்பிருப்பதால், அமெரிக்கா இதில் கவனமாக இருந்த, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

 இலங்கையின் போக்கு இன்னொரு மியான்மராகிக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய இலங்கை தமிழ் அரசு கட்சியினர், அமெரிக்கா தலையிட்டு தமிழ் மக்களின் வாழ்வுரிமை, அரசியலுரிமையை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். அனைத்து விடயங்களையும் அவதானமாக கேட்ட அமெரிக்க தூதர், தமிழ் மக்கள் சமமான அரசியலுரிமையுடன் வாழ அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், தமது நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார்.




இலங்கைக்கான தூதுவர் அலைனா ரெப்லிஸ்ற்றுக்கும் , இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகளிற்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு