மாவோயிஸ்டுகளைத் தேடிச்சென்ற இடத்தில், வலியால் துடித்த பழங்குடி கர்ப்பிணிப் பெண்ணை மத்திய சிஆர்பிஎஃப் படையினர் காட்டு வழியாக 6 கிலோ மீட்டர் தொலைவு மருத்துவமனைக்கு சுமந்துசென்ற சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.
பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த இச்சம்பவம் குறித்து சிஆர்பிஎஃப் செக்டர் தலைமையகத்தின் துணை கமாண்டன்ட் பிரசாந்த் குமார் கூறியதாவது:
சத்தீஸ்கரின் மாவோயிஸ்டுகள் இருப்பதாக கருதக்கூடிய பிரச்சினைக்குரிய இடங்களில் சிஆர்பிஎஃப் படைவீரர்கள் தேடுதல் நடவடிக்கைகளுக்காக விரிவான அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநில தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிஜாப்பூர்-கங்களூர் சாலையில் துணை ராணுவப் படையின் 85 வது பட்டாலியன் பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நயா ராய்ப்பூரில் உள்ள சிஆர்பிஎஃப் துறை தலைமையகத்திலிருந்து 85வது பட்டாலியன் குழுவினர் தேடுதல் வேட்டைக்காக பதேடா கிராமத்திற்கு சென்றனர். அந்நேரம் அவ்வழியே ஓடிவந்த ஒரு பள்ளி மாணவர் ஒரு பழங்குடி பெண் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருப்பது குறித்து படையினரிடம் தெரிவித்தார்,
இதனை அடுத்து படைத்தளபதி தனது முதலுதவி குழுவுடன் மாணவனைப் பின்தொடர்ந்து தொலைதூர கிராமத்தின் காயதப்பரா பகுதியில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்றார்.
அப் பெண் பிரசவ வலியால் துடிப்பதும் அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதையும் அறிந்த சிஆர்பிஎஃப் படையின் கமாண்டர் தனது குழுவினரை வேகமாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளால் சூழப்பட்ட கிராமத்தை ஆம்புலன்ஸ் அடைய முடியாததால், ஒரு நீண்ட மூங்கில் கட்டிலைக் கட்டி பாதுகாப்புப் பணியாளர்கள் ஒரு தற்காலிக ஸ்ட்ரெச்சரை விரைவாக உருவாக்கினர்.
அவர்கள் அந்தப் பெண்ணை மூங்கில் கட்டிலில் வைத்து தோள்களில் சுமந்துகொண்டு, அருகிலுள்ள மோட்டார் வாகனங்கள் செல்லும் சாலையை அடைவதற்கு முன்பாக 6 கி.மீ தூரத்திற்கு மாவோயிஸ்டுகள் இருப்பைக் கொண்ட காடுகளின் வழியாக நடந்து சென்றனர்.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு, அந்தப் பெண் சரியான நேரத்தில் பிஜாப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வாறு சிஆர்பிஎஃப் செக்டர் தலைமையகத்தின் துணை கமாண்டன்ட் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..