நேற்று ஒரே நாளில் லடாக் முதல் தமிழ்நாடு வரை 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் இத்தனை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் தெலங்கானா 8 பேரும், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் தலா 3, டெல்லி, உ.பி மற்றும் மகாராஷ்டிராவில் தலா 2, ஹரியானா, லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர், தமிழ்நாட்டில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, இதுவரை 151 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஒருவருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம் புனேவில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. இவர் பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு கடந்த 15ஆம் தேதி மும்பை திரும்பி காரில் புனே சென்றுள்ளார்.
ஐதராபாத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை நொய்டா மற்றும் லக்னோவில் தலா ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 4வது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 16ஆம் தேதி சவுதி அரேபியாவின் உம்ராவில் இருந்து 67 வயது மூதாட்டி திரும்பியுள்ளார்.
இவர் ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இவரது வீட்டைச் சுற்றிலும் 300 மீட்டர் பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக இருக்கிறது. மேலும் பலி அதிகரிக்காத வண்ணம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் பொதுமக்கள் வதந்திகளை நம்பி பீதி அடைய வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..