25,Apr 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

விசாகபட்டின இரசாயனக்கசிவினால் 8பேர் உயிரிழப்பு

விசாகப்பட்டினம் அருகே இரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்.ஜி.பொலிமர்ஸ் என்ற இரசாயனத் தொழிற்சாலையில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலையில் இரசாயன வாயு கசிந்து வெளியேறியுள்ளது.

அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல மீற்றர் தொலைவுக்குப் பரவிய நிலையில் காற்றில் கலந்த விஷவாயுவால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவித்தனர்.

இதனால், வீதியில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன் பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பலர் மயங்கி விழுந்தனர்.

இதுபற்றித் தகவல் அறிந்த பொலிஸார், மாநில மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

குறித்த விசவாயுத் தாக்கத்தால் சம்பவ இடத்தில் குழந்தை உட்பட மூவர் மரணித்தனர். மேலும், 200இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 5 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு 8 ஆக உயர்ந்துள்ளது.

வாயுக்கசிவு காற்றில் வேகமாக பரவியதையடுத்து, ஆலையை சுற்றி 3 கிலோ மீற்றர் சுற்றளவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டதுடன் பொதுமக்கள் ஈரமான முகக்கவசங்களை அணிந்து தற்காத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.





விசாகபட்டின இரசாயனக்கசிவினால் 8பேர் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு