மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதன் மூலம் மாற்றுத்திறனாளிகளை அரச நிர்வாக உறுப்பினர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் (COSP18) அங்கத்துவ நாடுகளின் 18 ஆவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அமெரிக்காவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்று வரும் அமர்வு 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின் அமர்விற்கு இம்முறை இலங்கை தலைமை தாங்குவதுடன், அமர்வின் தலைவராக அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னலகே சபையில் உரையாற்றுகையில்,
மாநாட்டின் ஒரு நாடாக, இலங்கை மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளின் பரஸ்பர மரியாதையைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. முதற்கட்டமாக, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதன் மூலம் அரச நிர்வாக உறுப்பினர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலம் தற்போது வரையப்பட்டு வருகின்றது. முக்கியமாக ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் ஒப்பந்தங்களின்படி, சைகை மொழி குறித்த வரைவு சட்டமூலமும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், சர்வதேச விதிமுறைகளுக்கிணங்க அணுகல் விதிமுறைகள் தற்போது பொருத்தமான முறையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக உலகளாவிய தரநிலைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான வளர்ந்து வரும் தேவைகளை அடையாளம் காண்பதன் மூலம் தேசிய மாற்றுத்திறனாளி கொள்கைகள் புதுப்பிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
0 Comments
No Comments Here ..