சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா வலியுறுத்தியுள்ளார்.
அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்பாக நேற்று (ஜூன் 30) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
செம்மணி சித்திபாத்தி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் ஐந்தாம் நாள் நேற்று (ஜூன் 30) முன்னெடுக்கப்பட்டது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 33 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட எலும்புத் தொகுதிகள் தொடர்பாக நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளதால், நேற்று பகல் பொழுதில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு ஆய்வுக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மட்டத்தில் உள்ள எலும்புத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளதால், சரியான விதத்தில் ஆய்வு செய்து, தெளிவாக அகழ்ந்தெடுப்பதற்கு நேரம் எடுக்கும். எனவே, நேற்று புதிதாக எந்த எலும்புத் தொகுதியும் அடையாளம் காணப்படவில்லை.
சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா மேலும் கூறுகையில், சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் தொடர்ந்து இதுபோன்ற படங்கள் பகிரப்படுமானால், குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும், நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
0 Comments
No Comments Here ..