இன்று (ஜூலை 25) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு விவாதத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர். இ. சிறிநாத் அவர்கள், தேசிய பாடசாலைகளுக்கு வழங்கப்படும் வளப்பகிர்வுகள், அதே அளவு சமமாக மாகாணப் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இவ்வாறு மாகாணப் பாடசாலைகளுக்கு வளங்களை வழங்குவதன் மூலம், குறிப்பிட்ட பிரதேசத்தின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் பாகுபாடு அற்ற தன்மைகள் காணப்படும் என்றும், அத்தகைய செயற்பாடு மூலமே மாணவர்களுக்குச் சமச்சீரான கல்வி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாகாண சபைகளுக்குப் போதியளவு வளப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றால் மாகாண சபைத் தேர்தலும், அதற்கான அதிகாரங்களும் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதைத் தவிர, குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக அதிகூடிய அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் அப்பிராந்தியத்தில் உள்ள சகல மாகாணப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் சீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் அவர் கவனம் செலுத்தினார்.
இதற்கு மேலாக, கடந்த காலங்களில் மாணவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் தமிழ் மன்னர்களுடைய வரலாறுகள் பறிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் வரலாற்றுப் பாடங்களில் எமது தமிழ் மன்னர்களின் வரலாற்றினையும் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இ. சிறிநாத் வலியுறுத்தினார்.













0 Comments
No Comments Here ..