05,Jul 2025 (Sat)
  
CH

செம்மணி விவகாரம்: பிரித்தானியா கவலை, பொறுப்புக்கூறல் வலியுறுத்தல்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானிய அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன், இந்த மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது.


முன்னதாக, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுகள், தடயவியல் பகுப்பாய்வுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்திய ஆலோசனைகள் ஆகியவற்றுக்காக, ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான சுயாதீன விசாரணையை பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்குமா என்பது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வ கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்குப் பதிலளித்த பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் துணை செயலாளர் கெத்தரின் வெஸ்ட், இந்த விவகாரத்தில் பிரித்தானியாவின் தீவிர ஈடுபாட்டை உறுதிப்படுத்தினார். 


மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை ஆதரிப்பதில் பிரித்தானிய அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும், வன்முறையாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் விசேட கவனம் செலுத்தி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் விவாதிக்குமாறு வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.


கெத்தரின் வெஸ்ட், கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வடக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரைச் சந்தித்து கலந்துரையாடியதையும் சுட்டிக்காட்டினார். 


மேலும், கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நாடளாவிய ரீதியாக உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நெருங்கிய உறவைப் பேணுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 


இந்த கவலைகளை இலங்கை அதிகாரிகளிடம் தொடர்ந்து எழுப்பி வருவதாகவும் கெத்தரின் வெஸ்ட் உறுதிப்படுத்தினார்.




செம்மணி விவகாரம்: பிரித்தானியா கவலை, பொறுப்புக்கூறல் வலியுறுத்தல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு