05,Jul 2025 (Sat)
  
CH
விளையாட்டு

பங்களாதேஷ் தொடரை வெல்ல இலங்கை தீவிரம்: நாளைய போட்டியில் அதிரடிக்கு வாய்ப்பு!

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 77 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி, தொடர் வெற்றியை எதிர்பார்த்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறது. முதல் போட்டி நடைபெற்ற அதே கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இரண்டாவது ஆட்டமும் நடைபெறவுள்ள நிலையில், கணிக்க முடியாத அந்த ஆடுகளம் இரு அணிகளுக்கும் முக்கிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முதல் ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், அணித் தலைவர் சரித் அசலங்க பெற்ற 106 ஓட்டங்களே சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்க உதவியது. 245 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய பங்களாதேஷ் அணி, ஒரு கட்டத்தில் 16 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 96 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அடுத்த 5 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. இறுதியில் அந்த அணி 167 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


இப்போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களான வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும், கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி எதிரணியை துவம்சம் செய்தனர். ஆர். பிரேமதாச மைதானம் 'வழக்கத்தை விடவும் துடுப்பாட்டத்திற்கு சற்று உதவும்' என அசலங்க முதல் போட்டிக்கு முன் குறிப்பிட்டிருந்தாலும், இரு அணிகளும் துடுப்பெடுத்தாடுவதில் தடுமாற்றம் கண்டதோடு, வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். எனவே, நாளைய போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை இரு அணிகளும் கவனமாக அணுகும் என்பது உறுதி.


அணியில் மாற்றங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம்

நாளைய போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. பங்களாதேஷ் அணிக்கு எதிராக கடந்த ஆறு ஆண்டுகளில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்புடன் இலங்கை அணி களமிறங்குகிறது. இலங்கை அணி கடைசியாக 2019 இல் இலங்கையில் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3–0 என கைப்பற்றியபோதும், அடுத்து நடந்த இரண்டு ஒருநாள் தொடர்களிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அந்த இரண்டு தொடர்களும் பங்களாதேஷ் மண்ணிலேயே நடைபெற்றன. பங்களாதேஷ் அணி இலங்கை மண்ணில் இலங்கை அணியை ஒருநாள் தொடரில் ஒருபோதும் வீழ்த்தியதில்லை.


தற்போது ஒருநாள் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி, இந்த நிலையைத் தக்கவைப்பதற்கு இந்த ஒருநாள் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் வெல்வது கட்டாயமாகும். ஒரு போட்டியில் தோற்றாலும் இலங்கை அணி ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிடும். எனவே, நாளைய போட்டி இலங்கைக்கு தொடரைக் கைப்பற்றுவதற்கான ஒரு முக்கியமான போட்டியாக அமையும்.




பங்களாதேஷ் தொடரை வெல்ல இலங்கை தீவிரம்: நாளைய போட்டியில் அதிரடிக்கு வாய்ப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு