09,May 2024 (Thu)
  
CH
ஆரோக்கியம்

கோடை காலத்திற்கேற்ற 5 யோகாசனங்கள்!

குளிர்காலத்திற்கு டாடா பைபை சொல்லிவிட்டு, கோடைகாலத்தை வெல்கம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. சோம்பேறிதனத்தை நமக்கு அதிகமாக வழங்கிய குளிர்காலத்தின் பிடியில் இருந்து விடுபட உடலுக்கு அதிகப்படியான உழைப்பை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். உடல் எடை போடுவதை தடுத்திட, உடற்பயிற்சிக்கு நேரத்தை ஒதுக்கியே ஆக வேண்டும். அதிகமாக உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதுமா என்ன? அதுமட்டும் போதாது. கொழுப்பு நிறைந்த உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ் ஆகியவற்றை தவிர்த்தே ஆக வேண்டும்.

உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுவதில் முக்கிய பங்கினை வகிப்பது ஆரோக்கியமான உணவுகள். எனவே, நீங்கள் உணவில் புரதச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள தவறாதீர்கள். உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும். குறிப்பாக கோடைகாலத்தில் குடிநீர் பாட்டில் இல்லாமல் எங்கேயும் சென்றுவிட வேண்டாம். மேலும், இளநீர், மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களையும் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாது, கோடையில் நிச்சயமான பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது.

கோடை வெயிலை தாக்குப்பிடிக்க உடலை தயார் செய்வது அவசியமான ஒன்றாகிவிட்டது. ஏனென்றால், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது அல்லவா? எனவே, கோடை வெயிலுக்கு ஏற்ப உடலை தயார் செய்ய உதவக்கூடிய 5 முக்கிய யோகாசனங்களை பற்றி இப்போது நான் உங்களுக்கு சொல்லி தரப் போகிறேன். வாருங்கள் பார்க்கலாம்…

சாந்தலோனாசனா

ஹாண்ட் பிளாங் என்று அழைக்கப்படும் இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் கைகள் வலுபெறுவதோடு, கவனம் மேலோங்கும்.

செய்முறை:

*முதலில் வயிறு தரையில் படும்படி படுத்துக் கொள்ளவும்.

*உடலின் பக்கவாட்டில் உள்ளங்கைகளை வைத்து, உடலை மெதுவாக மேல் நோக்கி தூக்கவும்.

*கால் நுனி மட்டும் தரையில் இருக்க, முட்டி, இடுப்பு, மேல் உடம்பு பகுதிகள் அனைத்தும் மேலே தூக்கி நேராக இருக்கவும்.

*கால் முட்டிகளை மடக்காமல் நேரே இருக்கவும்.

*உள்ளங்கைகளை தரையில் வைத்து, கைகளை நேராக நீட்டவும்.

*இதே நிலையில் சிறிது நேரம் அப்படியே இருக்கவும்.

வசிஸ்தாசனா

இந்த ஆசனமானது, உடலின் மேல் பாகத்தையும், குறிப்பாக இடுப்பு பகுதியையும் வலுவடைய செய்யும். அதுமட்டுமல்லாது, கைகள், மணிக்கட்டுகள் மற்றும் கால்களையும் வலுவாக்கும்.

செய்முறை:

*முதலில் பார்த்த சந்தோலானசனா முறையில் நின்று கொள்ளவும்.

*இப்போது இடது கை, தரையில் இருக்க வலது கையை மட்டும் மேல் நோக்கி நீட்டவும்.

*அடுத்ததாக, மேல் நோக்கி நீட்டிய வலது கையின் விரல்கள் மேல் நோக்கி நீட்டியிருக்கவும்.

*இப்போது, தலையை திருப்பி வலது கையை பார்க்கவும்.

*இதே நிலையில் சிறிது நேரம் இருக்கவும்.

*பின்பு, இதே போன்று இடது பக்கத்தில் செய்யவும்.

பாதஹஸ்தாசனா

இந்த ஆசனம் செய்வதற்கு கை, கால்களுக்கு நெகிழ்வு தன்மை தேவை. ஆனால், தினமும் இதனை தொடர்ந்து செய்ய செய்ய தசைகள் தளர்ந்திடும். கால் மூட்டுகள் மற்றும் தொடைகளுக்கு வலு சேர்க்கக்கூடிய ஆசனம் இது. இந்த ஆசனத்தை 5 சுவாசங்களுக்கு 3 முறை என செய்யலாம்.

செய்முறை:

*முதலில் நிமிர்ந்து கொண்டு, கால்களை சற்று விரித்து நின்று கொள்ளவும்.

*இப்போது மூச்சை உள்வாங்கியபடி, முன்நோக்கி மெதுவாக குனிந்து, கைகளால் கால் பாதங்களை தொட்டவுடன் மூச்சை விடவும். *கைகளை பாதங்களின் கீழ் வைத்துக் கொள்ளவும்.

*கைகள் சற்று வெளியே நோக்கி வளைந்தபடி இருக்கவும்.

*இதே நிலையில் இருந்துகொண்டு, கைகள் மற்றும் தோள்பட்டை தளர்த்தி கொள்ளவும்.

*கால் முட்டிகள் மடங்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். *முடிந்தவரை நெற்றியை, கால் முட்டிகளை இடையே கொண்டுவர முயலுங்கள்.

தனுராசனா

சமஸ்கிருதத்தில் இந்த ஆசனத்திற்கு வில் போன்ற ஆசனம் என்ற பொருள். தனுர் என்றால் வில்லை குறிக்கும். இந்த ஆசனமானது முழு முதுகிற்கும் ஒரு நீட்டிப்பை கொடுத்தும், கால்களை கட்டுப்படுத்தி, பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் கால இன்னல்களை நீக்கவும், இனப்பெருக்க உறுப்புகளை தூண்டுவதற்கும் உதவுகிறது.

செய்முறை:

*வயிறு தரையில் படும்படி படுத்துக் கொண்டு, கால்களை சற்று அகட்டிக் கொள்ளவும்.

*கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் நீட்டிக் கொள்ளவும்.

*மெதுவாக கால் முட்டிகளை மடித்து, கைகளை பின்புறமான நீட்டி, கணுக்கால்களை பிடித்துக் கொள்ளவும்.

*இப்போது மூச்சை உள்வாங்கி, உடலை மேல்நோக்கி தூக்கவும்.

*கால்களும், தலையும் தொட்ட கொள்ள முயற்சிக்கும் படி செய்யவும்.

*முகத்தில் எவ்வித அழுத்தத்தையும் காட்டாது, பார்வை நேராக இருக்க வேண்டும்.

*சுவாசத்தில் கவனத்தை செலுத்தி எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அப்படியே இருக்கவும்.

*15 முதல் 20 வினாடிகள் அழித்து மூச்சு விட்டு, பின்பு உடலையும், கால்களையும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து ஓய்வெடுக்கவும்.

சக்ராசனா

முழு சக்கர நிலை அல்லது வில் வடிவம் போன்றது இந்த ஆசனம். மார்பை திறந்து, தொடைகளை சீராக்கி, வயிறு மற்றும் கைகளுக்கு வலு சேர்க்கக்கூடிய ஆசனம் இது. சமஸ்கிருதத்தில் சக்கரம் போன்ற நிலை என்பது பொருள்.

செய்முறை:

*முதுகு கீழே படும் படி கீழே படுத்துக் கொள்ளவும்.

*கால்களை சற்று விரித்து நீட்டிக் கொண்டு, முட்டுகளை மடக்கி, பாதங்கள் தரையில் படும் படி வைத்து கொள்ளவும்.

*கைகளை தோள்பட்டைக்கு மேலே தூக்கி, கை விரல்கள் தோள்பட்டையை பார்க்கும்படி தரையில் ஊன்றவும்.

*இப்போது, மேல் உடலை மெதுவாக தரையில் இருந்து தூக்கி, உச்சந்தலையானது கீழ் நோக்கி பார்க்கும்படி உடலை வளைத்து நிற்கவும்.

*பாதங்கள், உள்ளங்களை தவிர உடலின் அனைத்து பாகங்களும் மேலே தூக்கியிருக்க வேண்டும்.

*உடலின் ஒட்டுமொத்த எடையையும் பாதங்களுக்கு அழுத்தமாக கொடுக்கவும்.

*10 முதல் 15 சுவாசங்கள் வரை இதே நிலையில் இருக்கவும்.

*பின்ன;ர், கை, கால்களை மெதுவாக நீட்டி ஓய்வு நிலைக்கு திரும்பவும்.

குறிப்பு: யோகாசனம் முதன்முதலில் செய்பவர்கள் யோகா ஆசிரியரின் ஆலோசனையின் பின் ஆரம்பிப்பது நல்லது………….




கோடை காலத்திற்கேற்ற 5 யோகாசனங்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு