கடந்த 26-02-2020 அன்று டெல்லியில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான மாநாடு நடைபெற்றது. அதில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள சாத் பால் மிட்டல் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி நம்யா ஜோஷியும் கலந்து கொண்டார். மாநாட்டில் உரையாற்றிய மாணவி, இப்போது உள்ள மாணவர்கள் புத்தகங்களை வாசிக்கவும், படிக்கவும் விரும்புவதில்லை என தெரிவித்தார். அதனால் அவர்கள் அதிக நேரம் செலவு செய்யும் வீடியோ கேம் மூலமே எப்படி கல்வியையும் கற்றுக்கொள்ள வைக்க முடியும் என்பதையும் விவரித்தார். மாணவி நம்யா ஜோஷி, மைன் கிராஃப்ட் (Minecraft) என்னும் வீடியோ கேம் மூலம் எப்படி வகுப்பறையில் கற்கும் பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் என்பதை விளக்கினார். மேலும் இதனை உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஸ்கைப் மூலமாக கற்றுக்கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். வகுப்பறை கல்வி முறை மாணவர்களுக்கு ஆர்வம் இல்லாததால் தொழில்நுட்பம் மூலம் கற்பது எப்படி என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இவரின் இந்த புதுவிதமான செயல் அந்த மாநாட்டில் கூடியிருந்த மைக்ரோசாஃப்ட் மென் பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நட்டெல்லா உட்பட பலரையும் வெகுவாக கவர்ந்தது.மேலும் சத்யா நட்டெல்லா பேசும்போது, இந்த காலத்து மாணவர்கள் மிகவும் அறிவாளிகளாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் மாணவி நம்யா ஜோஷியின் புதிய முயற்சி தன்னை வெகுவாக கவர்ந்துவிட்டதாகவும் கூறினார். கல்வியில் தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார். இந்த மாநாட்டில் 250 மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய செய்தி
0 Comments
No Comments Here ..