10,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு...!

டெல்லியில் நிகழ்ந்த வன்முறையில், பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, இந்த வன்முறை சம்பவம் தற்போது அரசியல் விவகாரமாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றன.

வடகிழக்கு டெல்லியில் இருதரப்பினருக்கு இடையே நடைபெற்ற இந்த கலவரம், ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கி வருகிறது. இரண்டு நாட்கள் நீடித்த இந்த கவலரம் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், பல இடங்களில் இன்னும் பதற்றமான சூழல் தொடர்ந்து வருகிறது. 

வன்முறை தொடர்பாக மத்திய மாநில அரசுகளை கண்டித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இந்த திடீர் பணியிட மாற்றத்திற்கு பின்னணியில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டியது காங்கிரஸ். ஆனால், இதற்கு பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் படியே நீதிபதி முரளிதர் பணியிடமாற்றம் நடைபெற்றதாக தெரிவித்தார். பணியிட மாற்றத்தின்போது நீதிபதியின் விருப்பமும் பதிவு செய்யப்படும் என்றும் வழக்கமான பணியிட மாற்ற நடைமுறையை காங்கிரஸ் அரசியலாக்குவதாகவும் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்தார். 

டெல்லி மக்களின் பாதுகாப்பு, உடைமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசு தலைவரை சந்தித்து மனு அளித்தனர் காங்கிரஸ் தலைவர்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கலவரத்தின்போது மத்திய மாநில அரசுகள் பார்வையாளர்களை போல வாய்யை மூட வேடிக்கை பார்த்ததாக குற்றம்சாட்டினார். கலவரத்தை கட்டுப்படுத்தாத உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 4 நாட்களாக டெல்லியில் நிகழ்ந்த வன்முறை , நாட்டிற்கே அவமானம் என்றார். மத்திய அரசின் தோல்வியால் தான் வன்முறையில் பலர் உயிரிழந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆனால், இந்த வன்முறைக்கு காரணம் காங்கிரஸ் கட்சியம் ஆம் ஆத்மி கட்சியுமே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசிய பேச்சு, வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாகக் குற்றம் சாட்டிய பிரகாஷ் ஜவடேகர், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான தஹிர் ஹூசேனின் வீடு, கலவரத்தை ஏற்படுத்துவதற்கான மையமாக செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். சிஏஏ குறித்து சிலர் வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்தபோதும், வன்முறையை தூண்டியபோதும் காங்கிரசும், ஆம் ஆத்மியும் அமைதியாக இருந்ததாகவும் பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கலவரத்தை தூண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் தண்டனை இரட்டிப்பாக வழங்கப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், தேச பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை அரசியலாக்க கூடாது என்றும் அவர் கூறினார். கலவரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். வீடுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறிய அவர், காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவை டெல்லி அரசே ஏற்கும் எனவும் அறிவித்தார். 

இதனிடையே வடகிழக்கு டெல்லியில் கலவரம் நடைபெற்ற பகுதியில், ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தியது. பல்வேறு இடங்களிலும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.




டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு...!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு