ஆந்திர மாநிலம் திருப்பதியில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சுற்றித் திரிந்த தைவான் நாட்டுக் குடிமகன் ஒருவர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகச் சீனாவில் இதுவரை 2ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் இந்த தொற்றுக் காரணமாக 3ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் இப்போது கொரோனா தொற்று தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிடும் இந்த நேரத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா கடுமையாக பரவி வருகிறது.
ஈரான் நாட்டுத் துணை அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஈரானில் இதுவரை 54பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ், இத்தாலி என அனைத்து பக்கமும் கொரோனா தொற்று பரவி வருகிறது.
தெற்கு கொரியாவில் 4ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில், கேரளாவில் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 2பேர் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில், தனியார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இயந்திரங்களைப் பொருத்துவதற்காகத் தைவான் நாட்டை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதிக்கு வந்திருக்கிறார். அவருக்குத் தொடர் காய்ச்சல், சளி ஆகியவை என கரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளது.
இதை உணர்ந்த அந்த தனியார் நிறுவனம், சம்பந்தப்பட்ட தைவான் நபர் குறித்து மாவட்ட சுகாதாரத் துறைக்குத் தகவல் அளித்துள்ளது. இந்த தகவலையடுத்து அந்த நபரைத் திருப்பதியில் உள்ள கரோனா சிறப்புப் பார்வை மையத்திற்கு வரவழைத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் சிறப்புச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதே வேளையில் அந்த நபரிடமிருந்து ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு பூனாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பூனா ஆராய்ச்சி மையத்திலிருந்து கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் அந்த தைவான் நபருக்குத் தொடர் சிகிச்சை வழங்கப்படும். இந்த நபரைத் தனிமைப்படுத்தியுள்ள ஆந்திர மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..