25,Nov 2024 (Mon)
  
CH
ஆன்மிகம்

வைகாசி வெள்ளி அம்மனுக்கு ஏற்ற நாள்

வைகாசி வெள்ளிக்கிழமையில் அம்மனைக் கொண்டாடுவோம். அம்மனை மனதாரப் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொள்வோம். எல்லா சத்விஷயங்களையும் தந்து, நம்மையும் நம் குடும்பத்தையும் காத்தருள்வாள் அம்பிகை.

வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்கு உகந்த நாள். மகாலக்ஷ்மியை வணங்கவேண்டிய அற்புதமான நாள். அஷ்ட லக்ஷ்மியரையும் வழிபடவேண்டிய நன்னாள். சாந்த சொரூபினியையும் உக்கிர தேவதையையும் வணங்கி அவர்களின் அருளைப் பெறவேண்டிய நாள்.

வைகாசி மாதத்தில், முருகப்பெருமானுக்கு உரிய விசாகம் நட்சத்திர நாள், முக்கியத்துவம் கொண்ட நாளாகப் போற்றப்படுகிறது. அதேபோல், கந்தனின் அன்னையையும் உலகின் அனைத்து சக்தியரையும் வணங்கி வழிபடவேண்டிய மாதமாகவும் கொண்டாடப்படுகிறது.

ஏதேனும் நல்லது நடந்தால், பணம் காசு சேர்ந்தால், வீடு வாசல் வாங்கினால், ‘சுக்கிர யோகம்தான் உனக்கு’ என்று சொல்லுவார்கள். வெள்ளிக்கிழமைக்கு சுக்கிர வாரம் என்றே பெயர் உண்டு. சுக்கிர பகவானின் அருளைப் பெறவேண்டுமெனில், மகாலக்ஷ்மியை மனதார வணங்கினாலே போதும்.

வைகாசி சுக்கிர வார வெள்ளிக்கிழமையில், சப்தமி திதி அமைந்திருக்கிற அற்புதமான நாளில், வீட்டில் விளக்கேற்றுங்கள். ‘அயிகிரி நந்தினி’ பாடுங்கள். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுங்கள். ‘கற்பூர நாயகியே கனகவல்லி’ பாடலை வாயாரப் பாடுங்கள். இவற்றில், குளிர்ந்து போய் உங்கள் இல்லத்துக்கு அடியெடுத்து வைப்பாள் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி!

மேலும், வெள்ளியன்று ராகுகாலம் என்பது காலை 10.30 முதல் 12 மணி வரை. இந்த நேரத்தில், துர்கை, காளி முதலான உக்கிர தெய்வங்களை விளக்கேற்றி வழிபடுவது, தீயசக்திகளை அழிக்கும். எதிர்ப்புகளையெல்லாம் இல்லாமல் செய்யும். இதேபோல், மாலையிலும் விளக்கேற்றி வழிபடுங்கள்.

வைகாசி சுக்கிரவாரத்தில், சக்தியை வணங்குங்கள். மகாலக்ஷ்மியை வழிபடுங்கள். சுக்கிர யோகம் கிடைக்கப் பெறுவீர்கள்.




வைகாசி வெள்ளி அம்மனுக்கு ஏற்ற நாள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு