தென்கிழக்காசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 39 ஆண்டுகள் பூர்த்தியாகிறது.
1981 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி அப்போதைய ஜே.ஆர் அரசின் அமைச்சர்கள் சிலரின் ஆதரவுடன், சிங்கள காடையர்கள் யாழ் நூலகத்திற்கு தீ வைத்தனர்.
மே 31ஆம் திகதி நள்ளிரவிற்கு பின்னர் வன்முறை கும்பல் நூலகத்தை சூறையாடி தீ மூட்டியது. அரிய ஓலைச்சுவடிகள், வரலாற்று நூல்கள் என சுமார் 97,000 நூல்கள் தீயில் கருகின.
தற்போது யாழ் நூலகத்தில் சுமார் 1,500 இற்கும் சற்று அதிகமான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வந்தாலும், அரிய ஓலைச்சுவடிகள் தீயில் கருகி விட்டன.
அழிந்த புத்தகங்கள் எவை?
இவற்றில் கிடைப்பதற்கு அரிதான ஐசாக் தம்பையா நன்கொடை கொடுத்த இலக்கியம், சமயம், மொழியியல் தத்துவம் தொடர்பாக சுமார் 6000 நூல்களும், இந்திய வர்த்தகர் ஒருவரால் கொடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சத்தியசோதனை, 1672 ஆம் ஆண்டில் பிலிப்பஸ் பால்டியார் என்பவர் எழுதிய டச்சு ஆட்சியில் இலங்கை என்னும் நூல், 1660 ஆம் ஆண்டில் கண்டி மன்னரால் சிறைபிடிக்கப்பட்டவேளை றொபேட் நொக்ஸ் என்பவர் எழுதிய இலங்கையராவார் என்னும் நூல் ஆகியவை அழிந்தன.
1585 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தலைவர்களால் தமிழில் எழுதப்பட்ட நூல், சேர் பொன்னம்பலம் இராமநாதன் எழுதிய பகவத்கீதை விளக்கம், சித்தாந்தம், செந்தமிழ் இலக்கிய நூல்கள், திருமதி இராமநாதன் அம்மையார் எழுதிய இராமாயாண மொழிபெயர்ப்பு, மகாகவி பாரதியாரின் நண்பரான நெல்லையப்பன் எழுதிய நூல்கள், கடலைக்குடி நடேச சாஸ்திரியார் எழுதிய சோதிட சாஸ்திர நூல்கள், வானசாஸ்த்திரம் சம்பந்தமான நூல்கள், சித்தவைத்திய வாசகங்கள் அடங்கலான ஏட்டுச்சுவடிகள் ஆகியவை அழிந்தன.
மேலும், முத்துத்தம்பிபிள்ளை ஏழுதிய அபிதானகோசம், சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி, முதலியார் இராசநாயகம் எழுதிய புராதன யாழ்ப்பாணம், சுவாமி ஞானப்பிரகாசம், முத்துத்தம்பிபிள்ளை எழுதிய யாழ்ப்பாணம் பற்றிய நூல்கள், கல்லடி வேலன் என்று அழைக்கப்பெற்ற கே.வேலுப்பிள்ளை இயற்றிய யாழ்ப்பாண வைபவகௌமுகி, சிற்பக்கலை பற்றிய நூல்கள், தனிநாயக அடிகளார் பதிப்பித்து வெளியிடப்பட்ட”தமிழ் கலாசாரம்” எனும் ஆங்கில சஞ்சிகை, இராசையனார், வன்னியசிங்கம், கதிரவேற்பிள்ளை, ஆனந்தகுமாரசாமி மற்றும் முதலியார் குலசபாநாதன் சேகரித்த நூல்கள், மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்து பிரதிகளும் அழிவடைந்தன.
தென்னாசியாவின் மிகப் பெரிய அறிவியல் பொக்கிஷமாக போற்றப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகத்தின் அழிப்பு என்பது மனித நாகரிகத்தின் மோசமான துயரம். 1981ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவிற்கு பின்னர் இந்த கொடுமை நேர்ந்த போது அதனை சென் பற்றிக்ஸ் கல்லூரியின் மாடியில் இருந்து நேரில் பார்த்த தாவீது அடிகளார் அந்த கணத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தி ஒன்றே அந்த நூலகத்தின் பெறுமதியை எடுத்துக் காட்டுகின்றது.
0 Comments
No Comments Here ..