18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

தற்போதைய கல்விநிலை மிகவும் வேதனைக்குரியது- வடக்கு ஆளுநர்

கல்வியையும் நிபுணத்துவத்தையும் இலங்கையின் பிற மாகாணங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்று பரப்பிய கல்விமான்களைக் கொண்டிருந்த வடக்கு மாகாணத்தின் தற்போதைய கல்வியின் நிலை மிகவும் வேதனைக்குரியதாக உள்ளதாக வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

வடக்கு ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.இளங்கோவன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் மு.து.பிறட்லி, மடு வலயக் கல்விப் பணிப்பாளர் மு.சத்தியபாலன், மன்னார் மற்றும் மடு வலயப் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஆளுநர் தெரிவிக்கையில், “கல்வியொன்றுதான் ஒரு நாட்டையும் சமுதாயத்தையும் மாற்றுகின்ற முக்கியமான கருவி என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன். நமது மாகாண பிள்ளைகளின் கல்வி மீது எனக்கு மிகுந்த அக்கறையுள்ளது.

கல்வியையும் நிபுணத்துவத்தையும் இலங்கையின் ஏனைய பிற மாகாணங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்று பரப்பியவர்கள் நமது மாகாணத்தைச் சேர்ந்த கல்விமான்கள். இவ்வாறான கல்விமான்களைக் கொண்டிருந்த நமது மாகாணத்தின் தற்போதைய கல்வியின் நிலை மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.

நமது சமூகம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பல கிராமங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பல பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை குறைந்துகொண்டிருக்கிறது.

விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல் போன்ற முக்கியமான பாடங்களைப் படிக்க மாணவர்கள் முன்வருவதும் குறைவடைந்து செல்வதால் பதவிவெற்றிடங்களை நிரப்ப முடியாதவொரு நிலையும் காணப்படுகின்றது.

கல்வி இல்லாமல் எந்தவொரு நிர்வாகத்தையும் கட்டியெழுப்ப முடியாது. இந்நிலையை மாற்ற வேண்டும். அதற்காக அர்ப்பணிப்புடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

அந்தப் பயணத்தில் ஆசிரியர்கள் சுயவிருப்பத்துடன் இணைவதோடு மட்டுமல்லாது கல்வியின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தெளிவுபடுத்தி கல்வியுடன் வெளியுலக அறிவையும் மாணவர்களுக்கு வழங்கி நமது மாகாண வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

வாழ்க்கைக் கல்வியை மாணவர்கள் கற்க வேண்டும். மன உத்வேகத்துடன் ஆசிரியர்கள் செயற்பட வேண்டும். முக்கிய பாடங்களான விஞ்ஞானம், மருத்துவம், பொறியியற் துறையில் மாணவர்களை உருவாக்க வேண்டும்.

இனிவரும் பரீட்சைகளில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மாணவர்களை சித்தியடைச் செய்வதை இலக்காகக் கொண்டு அதிபர், ஆசிரியர் சமூகத்தினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வடமாகாண வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க விருப்பத்துடன் இருக்கிறார். நானும் உங்கள் தேவைகளை மாகாண சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும் மத்திய அரசிடம் கொண்டு சென்றும் நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும் நமது சமூகத்தின் வளர்ச்சிக்கும் என்னாலான பூரண ஒத்துழைப்புக்களை நல்குவதற்கு தயாராகவே உள்ளேன்” என்று குறிப்பிட்டார்.




தற்போதைய கல்விநிலை மிகவும் வேதனைக்குரியது- வடக்கு ஆளுநர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு