05,May 2024 (Sun)
  
CH
உலக செய்தி

தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்

தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆப்கானிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக கட்டார் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கட்டார் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கட்டாரில் தலிபான்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானில் அமைதி ஏற்பட கட்டார் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்தார்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களது நிபந்தனைகளை ஏற்பதாக சமீபத்தில் ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி அறிவித்திருந்ததன் பின்னணியில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து தலைநகர் டோஹாவில் தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டார் தலைநகர் டோஹாவில் கடந்த பெப்ரவரி மாதம் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-தலிபான் அமைதி ஒப்பந்தத்தின் கீழ் கைதி பரிமாற்றம் ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஆப்கானிய அரசாங்கம் 5,000 தலிபான் கைதிகளை விடுவிக்கும் என்றும், தலிபான்கள் சுமார் 1,000 ஆப்கானிய பாதுகாப்புப் படை வீரர்களை விடுவிப்பார்கள் என்றும் இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு முன்னர், ஏற்கனவே சுமார் 1,000 தலிபான் கைதிகளை ஆப்கான் விடுவித்திருந்தது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளில் சுமார் 300 உறுப்பினர்களை தலிபான்கள் விடுவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் திகதி நியூயோர்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.




தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு