07,Jul 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இறந்த உடல்களையும் உருவியெடுக்கிறது தமிழ் அரசு கட்சி: மட்டக்களப்பில் சர்ச்சை!

மட்டக்களப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உறுப்பினர் ஒருவருக்கு இறுதி நிகழ்வில், அவரது உடலுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொடியின் கொடி போர்த்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக இருந்தவர் சந்திரகுமார். கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் (2018) அவரை கட்சி ஒதுக்கியது.

இதையடுத்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை அணுகி, தனது வட்டாரத்தில் போட்டியிடும் விருப்பத்தை வெளியிட்டதுடன், ரெலோவின் ஆயுள்கால உறுப்பினராகவும் இணைந்து கொண்டார்.

அவர் ரெலோவில் போட்டியிடுவதில் எந்த சிக்கலுமில்லை, அவர் இனி ரெலோவுடனேயே இருக்கட்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் அப்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் பெரிய உப்போடை உறுப்பினராக தெரிவாகிய சந்திரகுமார், பின்னர் வவுனியாவில் நடந்த ரெலோ மாநாட்டில் ரெலோ பொதுக் குழு உறுப்பினராக தெரிவு செய்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 13ம் திகதி அவர் காலமானார்.

அவரது பூதவுடலை வைத்தே இப்பொழுது அரசியல் விளையாட்டுக்கள் இடம்பெற்று வருகிறது.

அவர் உயிரிழந்ததும், மட்டக்களப்பில் உள்ள ரெலோவின் அலுவலகத்தில் அஞ்சலி பனர் வைக்கப்பட்டதுடன், வெள்ளைக்கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் எந்தவிதமான அஞ்சலியும் செலுத்தப்படவில்லை.

கட்சி மாறியவருக்கு எதற்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென கட்சிக்காரர்கள் நினைத்திருப்பார்கள் என நீங்கள் நினைத்தால் ஏமாந்து விடுவீர்கள்.

இது தேர்தல் காலம் அல்லவா. அலுவலகத்தில் அஞ்சலி போஸ்டர் கட்டி பலனில்லை, மக்கள் கூடுமிடத்தில் அரசியல் செய்ய வேண்டுமென நினைத்தார்களோ என்னவோ, அவரது உடலுக்கு தமிழ் அரசு கட்சியின் கொடியை போர்த்தி விட்டனர்.

நேற்று (14) அவரது இறுதி நிகழ்வு நடந்தது. இதில் கலந்து கொண்ட மாவை சேனாதிராசா, செயலாளர் கி.துரைராசசிங்கம் ஆகியோரிடம் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

எமது கட்சி உறுப்பினர்- தற்போது மத்திய குழு உறுப்பினர்- அவரது உடலுக்கு தமிழ் அரசு கட்சியின் கொடியை போர்த்தியமை அரசியல் அநாகரிகமானது என்பதை மட்டும் தற்போது கூறுகிறேன். வேறு ஒன்றும் இப்போது கதைக்கவில்லை. காலம் வரும்போது சொல்கிறேன் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாவை- “அப்படியா தம்பி.. எனக்கு இது ஒன்றும் தெரியாது. வரச்சொன்னார்கள் வந்தேன். தமிழ் அரசு கட்சியின் கொடியை, கட்சிக்காக இறுதிவரை வாழ்ந்தவர்களிற்கு மட்டுமே மரியாதையாக போர்த்துவதை தந்தை செல்வா காலம் முதல் பக்குவமாக கையாண்டு வருகிறோம். எமது செயலாளருக்கு (துரைராசசிங்கம்)“ யாருக்கு எப்படி கொடி போர்பது என்பதுகூட தெரியவில்லை. நான் பிறகு பேசிறன் தம்பி“ என அப்பாவியாக பதிலளித்தார்.

ரெலோவின் உறுப்பினர் ஒருவர் மாவை சேனாதிராசாவிடம்- உயிரோடிருக்கும் கோடீஸ்வரன் போன்றவர்களைத்தான் பிடுங்கி எடுக்கிறீர்கள் என்றால், இறந்த சடலங்களையுமா தமிழ் அரசு கட்சிக்கு பிடுங்கி எடுக்கிறீர்கள். இதுதான் தந்தை செல்வா கற்றுத்தந்த அரசியல் பாடமா என சூடாக கேள்வியெழுப்பினார். இதை எதிர்பாராத மாவை திண்டாட, கேள்வி கேட்டவரை சமரசம் செய்து, செல்வம் அடைக்காலநாதன் அனுப்பி வைத்தார்.




இறந்த உடல்களையும் உருவியெடுக்கிறது தமிழ் அரசு கட்சி: மட்டக்களப்பில் சர்ச்சை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு