யாழ்ப்பாண மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் ராணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்றது.
இதில் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலர்கள் மற்றும் பிரதேச இராணுவ பிரிவுகளின் தளபதிகள் கலந்துகொண்டனர்.
இராணுவத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காகவே நாம் கூடியுள்ளோம்.
குறிப்பாக 90 இராணுவ வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதனை ஆளுநர் மற்றும் அரச அதிபருடன் கலந்துரையாடி அதனடிப்படையிலே இன்று பிரதேச செயலர்களுக்கு ஆட்சேர்ப்பு தொடர்பான விடயங்களை விளக்குவதற்காகவே கூட்டத்தில் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம்.
குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஒரு சிலரே தற்போது இராணுவத்தில் இணைந்து கடமை ஆற்றி வருகின்றார்கள். ஆனால் இராணுவத்தில் இலங்கையில் எந்த பாகத்தில் இருந்தும் யாரும் இணைந்து கடமை ஆற்ற முடியும். அதற்கு தடையில்லை. அது தொடர்பாக எமது இராணுவ தளபதியும் ஒத்துழைப்பு வழங்குகிறார்.
தற்போது உள்ள covid-19 நிலைமையின் காரணமாக பல இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாது அங்கேயும் இங்கேயும் செல்வதை காணக்கூடியதாக உள்ளது. சில இளைஞர்கள் covid 19நிலைமை காரணமாக தனியார் துறைகளில் வேலைசெய்தவர்கள் வேலை இழந்து தவிப்பதை காணக்கூடியதாக உள்ளது.
அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு கோரிக்கையினை விடுக்க விரும்புகின்றேன். நல்ல ஒரு சந்தர்ப்பத்தினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனைய வேலை வாய்ப்புகளை விட இந்த இராணுவ வேலை வாய்ப்பானது மிகவும் விசேடமான ஒரு வேலை வாய்ப்பாகும். குறிப்பாக ஓய்வூதிய திட்டம் மற்றும் ஏனைய வசதி வாய்ப்புகள் ஏனைய அரச வேலைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறந்ததாக காணப்படுகின்றது.
இராணுவத்தில் இணைவதன் மூலம் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாக யாழ் மாவட்ட விவசாய துறை சார்ந்த வெற்றிடங்களுக்கு இணையுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..