வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன் அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
இப் புயல் சின்னம் திருகோணமலையிலிருந்து கிழக்கு, தென்கிழக்கு திசையில் நேற்று (01) இரவு 11.30 மணியளவில் 330 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்ததாகவும் இன்று இரண்டாம் திகதி மாலை அல்லது இரவு மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்குமிடையே கரையைக் கடக்குமென்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் கடும் புயலாக மேலும் வலுவடையும் வாய்ப்பு அதிகளவில் இருப்பதுடன் இன்று (02) மாலை அல்லது இரவில் இது புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இன்று மாலை அல்லது இரவு புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 85-90கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதுடன் வடக்கு, கிழக்கில் சுமார் 200 மில்லி மீட்டர் மழை வரை கடும் மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. கிழக்கு கரையோரங்களில் கடல் சீற்றமாக காணப்படுவதுடன் அலைகள் சுமார் 03 மீற்றர் உயரம் வரை எழும் என்பதுடன் கடல் நீர் உட்புகவும் வாய்ப்புள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை, பருத்தித்துறை பகுதிகளினூடாக புயல் கரையை கடக்கும் அதேவேளை மரங்கள் முறிவதுடன் மின்கம்பங்கள், மின் கம்பிகளுக்கு பலத்த சேதம் ஏற்படும். அத்துடன் வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கிழக்கு கரையோரப் பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமது மீன்பிடி வள்ளங்கள் படகுகள்,தோணிகள் என்பவற்றை மிகவும் பாதுகாப்பாக கரையில் இழுத்து கட்டி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இச்சமயத்தில் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்களும் முடிந்தவரை கரைக்கு திரும்புமாறும் தமது உடமைகளை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் புயல் மன்னார் ஊடாக வெளியே செல்லும் என்றாலும் இதன் தாக்கம் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் காணப்படுமென வானிலை அவதான நிலையம் தெரிவசிக்கிறது.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக உருவெடுக்கும் அபாயம் காணப்படுவதால் நாட்டைச் சூழவுள்ள கடற்பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த தாழமுக்கம் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் அது ஒரு சூறாவளியாக உருவாகலாம்.
அவ்வாறு சூறாவளி உருவாகுமானால் அது நாட்டின் கிழக்குக் கடற்கரையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான கடல் பிரதேசங்கள் ஊடாக நாட்டுக்குள் நகரக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனை கவனத்திற்கொண்டு மறு அறிவித்தல் வரை நாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள கடல் பிரதேசங்களில் மீன்பிடித்தல் மற்றும் கடற்படையினரின் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை 03ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா நேற்று இதனை அறிவித்துள்ளார்
புயல் மற்றும் கடும் மழையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக பாடசாலைகளை பயன்படுத்தும் நோக்குடனேயே அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கில் ஏற்படவுள்ள சீரற்ற காலநிலை மற்றும் கடும் காற்று, வெள்ளம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்பதால் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் கிழக்கு ஆளுநர் தீர்மானித்துள்ளார்.
இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடும் மழை, வெள்ளம் காரணமாக இடம்பெயரும் மக்களை முன்பு போன்று ஒரே பாடசாலையில் பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று காரணமாக இந் நிலை ஏற்பட்டுள்ளதால் சுகாதார பாதுகாப்புடன் அவர்களை வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ள காரணத்தால் அதிகளவு பாடசாலைகள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இடம்பெயரும் மக்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஒரு வகுப்பறை என்ற ரீதியில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதேவேளை, மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 50 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30, -40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு மிகப்பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
0 Comments
No Comments Here ..