தங்களது அணுசக்தி மையங்களில் அணு ஆயுதங்கள் உருவாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய சா்வதேசக் கண்காணிப்பாளா்கள் ஆய்வு செய்வதற்குத் தடை விதிப்பதற்கான மசோதா ஈரான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டின் முக்கிய அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே படுகொலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரான் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஈரானின் அணுசக்திக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மசோதாவில், ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய்த்துறை மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை தளா்த்துவதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 3 மாத கால கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கெடுவுக்குள் பொருளதாரத் தடைகள் தளா்த்தப்பட்டு, சா்வதேச வங்கிக் கட்டமைப்பைப் பயன்படுத்த ஈரான் அனுமதிக்கப்படாவிட்டால் வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் பல நிபந்தனைகளை மீற அந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரான் அணு மையங்களில் சா்வதேசக் கண்காணிப்பாளா்கள் ஆய்வு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை அதிகாரிகள் ரத்து செய்ய முடியும்.
மேலும், அணுசக்தியைப் பெறுவதற்கான யுரேனியம் எரிபொருளை 20 சதவீதம் வரை செறிவூட்ட அந்த மசோதா அனுமதிக்கிறது.
அணு ஆயுதங்களை உருவாக்குவதற்குத் தேவையானதைவிட (85 சதவீதத்துக்கும் மேல்) இது மிகவும் குறைவு என்றாலும், மின்சாரம் தயாரிப்பதற்குத் தேவையானதைவிட (சுமாா் 5 சதவீதம்) இது அதிகமாகும்.
இதுதவிர, கெடு தேதிக்குள் பொருளாதாரத் தடைகள் தளா்த்தப்படாவிட்டால் நடான்ஸ் மற்றும் ஃபோா்டோ பகுதிகளில் உள்ள அணுசக்தி மையங்களில் புதிய யுரேனியம் செறிவூட்டிகளை நிறுவவும் அந்த மசோதா வழிவகை செய்துள்ளது.
290 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அந்த மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டபோது, மசோதாவுக்கு ஆதரவாக 251 வாக்குள் பதிவாகின. அதையடுத்து அந்த மசோதா வெற்றி பெற்றது.
அதையடுத்து, அந்த மசோதா மேலும் ஒரு நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு விடப்படும். அதிலும் மசோதா வெற்றி பெற்றால், கண்காணிப்பு கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறி, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த மசோதா கடந்த ஓகஸ்ட் மாதமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே படுகொலைக்குப் பிறகு அந்த மசோதாவை நிறைவேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் அணுசக்தி திட்டங்களில் முக்கிய பங்காற்றி வரும் மோசென் ஃபக்ரிஸாதே, தலைநகா் டெஹ்ரான் அருகிலுள்ள அப்சாா்ட் நகரில் மா்ம நபா்களால் கடந்த மாதம் 27 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டி வருகிறது.
0 Comments
No Comments Here ..