காலநிலை மாற்ற பாதிப்பின் காரணமாக தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயங்குவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதிகரித்துவரும் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. திடீர் மழைப்பொழிவு, அதிகரிக்கும் புயல்கள், உயரும் வெப்பநிலை போன்றவற்றால் சூழலியலில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் எதிர்வரும் சூழலியல் நெருக்கடிகளுடன் போராட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் தம்பதிகள் புதிதாக குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் விருப்பம் தெரிவிப்பதில்லை எனும் அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது.
27 முதல் 45 வயதிற்குட்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே காலநிலை மாற்றம் குறித்த அச்சங்களுடன் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 96% பேர் காலநிலை மாற்ற பாதிப்பு நிறைந்த உலகில் தங்கள் எதிர்கால குழந்தைகளின் நல்வாழ்வைப் பற்றி மிகவும் கவலை கொண்டுள்ளனர் என ஆய்வுக்குத் தலைமை தாங்கிய சிங்கப்பூர் யேல்-என்யூஎஸ் கல்லூரியின் மத்தேயு ஷ்னைடர்-மேயர்சன் தெரிவித்தார்.
ஏற்கெனவே பெற்றோர்களாக இருந்த சிலர் தங்கள் குழந்தைகளைப் பெற்றதற்கு வருத்தம் தெரிவித்ததாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், வயதானவர்களைக் காட்டிலும் இளையவர்கள் தங்கள் குழந்தைகள் அனுபவிக்கும் காலநிலை தாக்கங்கள் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பரந்துபட்ட அளவிலான ஆய்வு காலநிலை மாற்ற பாதிப்பு குறித்த ஒத்த பார்வைகளை வழங்கும் எனவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..